வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (23/11/2018)

கடைசி தொடர்பு:16:35 (23/11/2018)

`வாக்குறுதியை நிறைவேற்றலன்னா செருப்பால் அடியுங்க!' - வாக்காளர்களை அதிரவைத்த சுயேச்சை வேட்பாளர்

தெலங்கானா தேர்தலை முன்னிட்டு, மக்களிடம் ஓட்டுக்கேட்க வித்தியாசமான முறையைக் கையாண்டு வருகிறார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர். 

சுயேச்சை வேட்பாளர்

சட்டப்பேரவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலுக்குத் தயாராகி வருகிறது தெலங்கானா மாநிலம். இங்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பு வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களைக் கவர வித்தியாசமான முறையில் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்தவகையில் சில நாள்களுக்கு முன்பு, பிரசாரத்தில் ஈடுபட்ட ராஷ்ட்ரிய சமிதி கட்சி வேட்பாளர் மதுசூதனா சாரி, அப்பகுதியில் உள்ள சலூன் கடைக்குச் சென்று அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவருக்கு ஷேவிங் செய்து வாக்கு திரட்டினார். மேலும், இறந்தவரின் உடலைத் தூக்கிச்சென்று மக்களிடையே தனது ஆதரவைத் தேடிக்கொண்டார். மற்றும் சில வேட்பாளர்களோ தொகுதியில் உள்ள குழந்தைகளைக் குளிப்பாட்டுதல், வயதானவர்களுக்கு உணவு ஊட்டிவிடுதல் எனப் பிரசாரம் செய்து வருகின்றனர். 

இதற்கெல்லாம் மேலே ஒருபடி சென்று வேட்பாளர் ஒருவர் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அந்தச் செய்தி தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. அகுலா ஹனுமந்த் என்னும் வேட்பாளர் கொரட்லா பகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளார். இதற்காக மக்கள் ஆதரவைப் பெறுவதற்காகத் தொகுதியில் வீடு, வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரித்து வருகிறார். அப்படி வாக்கு சேகரிக்க செல்லும்போது ஒவ்வொரு வீட்டிலும் வாக்குறுதிகளைத் தெரிவிப்பவர் கூடவே காலணிகளை கொடுக்கிறார். காலணிகள் எதற்காக எனக் கேட்கும்போது, ``தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் என்னை இந்த செருப்பால் அடியுங்கள்'' எனக் கூறி மக்களைக் கவர்கிறார். ஒரு வீடு தவறாமல் தொகுதியில் உள்ள அனைத்து வீட்டிலும் இந்த மாதிரி கூறி வாக்கு சேகரித்து வருவது மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க