வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (24/11/2018)

கடைசி தொடர்பு:11:46 (24/11/2018)

`யாதீஷ் சந்திரா எந்தத் தவறும் செய்யவில்லை' - பினராயி விஜயன்!

சபரிமலைக்குச் செல்லும் வழியில் நிலக்கல் பகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் காரை வழிமறித்த காவல் துறையினர், `தனியார் வாகனங்களை அனுமதிப்பதில்லை' எனக் கூறி தடுத்தனர்.

பினராயி விஜயன்

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்பி யாதீஷ் சந்திரா, காரை அனுமதிக்க மறுப்பதற்கான காரணத்தைக் கூறி, பக்தர்கள், 'அரசுப் பேருந்தில்தான் பம்பைக்குச் செல்ல முடியும் என்று  கறார் காட்டினார். இல்லை கார்களை அனுமதிக்க அமைச்சர் உத்தரவிட்டு கடிதம் எழுதித்தந்தால் கார்களை அனுமதிப்பதாகப் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்தார். யாதீஷ் சந்திராவின் எதிர்ப்பால், பொன். ராதாகிருஷ்ணன் கேரள அரசுப் பேருந்தில் பம்பைக்குச் சென்றுவந்தார். இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட, அதுவரை கேரள கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்குச் சிம்மசொப்பனமாக இருந்த யாதீஷ் சந்திரா, தற்போது அவர்களிடத்தில் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அதேநேரம், பா.ஜ.க தொண்டர்கள் யாதீஷ் சந்திரா மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும், யாதீஷ் சந்திராவுக்கு எதிராகவும், கேரள கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் கன்னியாகுமரியில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், யாதீஷ் சந்திரா மீது நடவடிக்கைக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டுவந்தது. எனினும், அதிகாரபூர்வமாகத் தகவல் ஏதும் வரவில்லை. இதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயன் சபரிமலையில் நடந்த சம்பவம்குறித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மத்திய அமைச்சரிடம் ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்டால் அது தவறுதான். ஆனால், இந்த விவகாரத்தில் போலீஸ் தலையீடு சரியான திசையில் இருந்தது. அமைச்சர் மற்றும் எஸ்பி யாதீஷ் சந்திரா இடையேயான வாக்குவாதம் என்பது வாகனங்கள் நுழைய அனுமதி அளிக்கக்கூடிய விவகாரம். இதில், எஸ்பி எந்தத் தவறும் செய்யவில்லை. சங் பரிவார் இயக்கங்கள் போலீஸ் படையைத் தாக்க முயல்கின்றன. வன்முறைகளைத் தூண்டுபவர்களையும், பக்தர்களைத் தடுக்க முயன்றவர்களுக்கும் எதிராக மட்டுமே போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான பக்தர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. உண்மையான பக்தர்களுக்கு பாதிப்பில்லை என்பதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. சந்நிதானத்தில் ஐயப்பன் பாடல்களைப் பாட யாருக்கும் தடை விதிக்கவில்லை. தனியாகவோ அல்லது குழுவாகவோ ஐயப்பனைத் தரிசிக்கலாம்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க