வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (25/11/2018)

கடைசி தொடர்பு:16:31 (25/11/2018)

படேல் சிலையை மிஞ்சும் ராமர்சிலை! - அயோத்தியில் நிறுவ யோகி ஆதித்யநாத் தீவிரம்

படேல் சிலையை விட ராமருக்கு பெரிய சிலை அமைக்கப்படும் என  உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

ராமர் சிலை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என அங்குள்ள இந்து அமைப்புகள் வலுவான கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். 

சிலை

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில்  பிரமாண்ட ராமர் சிலை அமைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரையில் உலகிலேயே மிகப்பெரிய வெண்கல சிலை அமையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குஜராத்தில் சர்தார் படேலுக்கு 182 மீட்டர் உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டு கடந்த மாதம் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

தற்போது அயோத்தியில் அமையவுள்ள ராமர் சிலை 221 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இது அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. நேற்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ராமர் சிலையின் மாதிரி மற்றும் சிலை அமையவுள்ள பகுதியின் மாதிரியை வெளியிட்டார். மேலும் சிலை அமையவுள்ள இடத்தில் மண் பரிசோதனை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். அதில் ராமர் சிலையின் பீடம் 50 மீட்டர் உயரமும், சிலையின் மொத்த உருவம் 151 மீட்டர் உயரமும் மற்றும் ராமர் சிலைக்கு மேலே உள்ள குடை 20 மீட்டர் நீளமும் கொண்டிருக்கும் எனக் கூறியுள்ளனர்.