பண்டிகை காலம் முடிந்தது! - உயருகிறது டிவி, வாஷிங் மெஷின், மிக்ஸி விலை | Prices of TV, home appliances may go up 7-8% from next month

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (26/11/2018)

கடைசி தொடர்பு:13:20 (26/11/2018)

பண்டிகை காலம் முடிந்தது! - உயருகிறது டிவி, வாஷிங் மெஷின், மிக்ஸி விலை

ண்டிகை காலம் முடிவடைந்துவிட்டதால், டிவி,  வாஷிங் மெஷின், ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களது விற்பனை விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. இதனால், அவற்றின் விலை அதிகரிக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

டிவி விலை உயருகிறது

ஓணத்தில் தொடங்கும் பண்டிகை காலம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தசரா மற்றும் தீபாவளியுடன் முடிவடைகிறது. இந்தப் பண்டிகைகளையொட்டி, கடந்த சில மாதங்களாக நுகர்வோர் பொருள் உற்பத்தியாளர்கள், தங்களது லாப விகிதத்தைக் குறைத்துக்கொண்டு பொருள்களை விற்று வந்தனர். லாபம் குறைவாக இருந்தாலும், விற்பனை அதிகமாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் அவர்கள் இந்த விலைக் குறைப்பை மேற்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், பண்டிகை சீஸன் முடிவடைந்து விட்டதால், இவற்றின் விற்பனை குறைந்துவிட்டது. மேலும், டாலருக்கு நிகரான  ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி விலை அதிகரிப்பு  மற்றும் சுங்க வரி உயர்வு போன்றவை காரணமாக தங்கள் பொருள்களுக்கான அடக்கவிலை அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஓரளவுக்காவது விலையை உயர்த்தினால்தான் தங்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்றும் இந்த நிறுவனங்கள் கருதுகின்றன.

இதனால், வருகிற டிசம்பர் மாதம் முதல் டிவி, வாஷிங் மெஷின், ஏசி, மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றின் விற்பனை விலையை 7 முதல் 8 சதவிகிதம் வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பான்சானிக் இந்தியா நிறுவனம், தனது தயாரிப்பு பொருள்களின் விலையில் 7 சதவிகிதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அதன் சிஇஓ மணிஷ் சர்மா தெரிவித்துள்ளார். அதேபோன்று ஹையர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் எரிக் பிராகன்ஷா, தங்களின் லாப விகிதம் மிகவும் குறைந்துவிட்டதால், விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாததாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

தயாரிப்பு பொருள்களின் மீது 3 முதல் 4 சதவிகித உயர்வு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டப்போதிலும், பண்டிகைகள் காரணமாக அந்த விலை உயர்வு அமல்படுத்தப்படவில்லை என்று மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கமல் நந்தி தெரிவித்துள்ளார். அதேசமயம் சோனி நிறுவனம், தற்போதைக்கு டிவி விலையை உயர்த்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. 

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், வாஷிங் மெஷினைத் தவிர்த்து இதர நுகர்வோர் பொருள்கள் மற்றும் மின்னணு பொருள்கள் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. இன்னும் சொல்லப்போனால் டிவி, ஏசி போன்ற பொருள்களின் விற்பனை அளவு குறைந்துள்ளதாகவும், பிரிட்ஜ் விற்பனை ஏற்ற இறக்கம் இல்லாமல் அப்படியே இருப்பதாகவும் கன்ஸ்யூமர்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் மேனுஃபேக்சரர்ஸ் அசோசியேஷன் (CEAMA) தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க