‘நூதன முறையில் ஓட்டு கேட்கும் வேட்பாளர்!’ - மத்தியப் பிரதேசத்தில் சுவாரஸ்யம் | mp candidate polishing shoes of voters in madhya pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (27/11/2018)

கடைசி தொடர்பு:09:27 (27/11/2018)

‘நூதன முறையில் ஓட்டு கேட்கும் வேட்பாளர்!’ - மத்தியப் பிரதேசத்தில் சுவாரஸ்யம்

மத்தியப் பிரதேசத்தில் எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகிறார். 

வேட்பாளர்

அடுத்த வருடம் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டணி, வாக்கு சேகரிப்பில் சிறு கட்சி முதல் தேசிய கட்சிகள் வரை அனைத்தும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே கடந்த மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். இதில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. 

இந்த நிலையில், நேற்று மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ராஷ்ட்ரிய ஆம்ஜன் கட்சியின் சார்பாக எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஷரத் சிங் குமார் பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்குச் சேகரித்து அம்மாநிலத்தைப் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ராஷ்ட்ரிய ஆம்ஜன் கட்சியின் சின்னமாக ஷூ உள்ளது. இதனால் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் பொதுமக்களின் ஷூவை துடைத்து ஓட்டுக்கேட்டுள்ளார். 

இது குறித்துப் பேசியுள்ள ஷரத் சிங், `` ஷூ தேர்தல் ஆணையம் வைத்துள்ள சின்னங்களில் ஒன்று. இதைத் தேர்வு செய்ய மற்ற எந்தக் கட்சிகளும் முன்வரவில்லை. எனவே, ஷூ சின்னத்தை நாங்கள் தேர்வு செய்தோம். இதை எங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே நாங்கள் கருதுகிறோம்’ எனக் கூறியுள்ளார். 

இவர் மட்டுமல்லாது தெலங்கானாவைச் சேர்ந்த சில வேட்பாளர்களும் இதேபோன்று சில நூதன முறைகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர். தெலங்கானாவைச் சேர்ந்த அகுலா ஹனுமந்த் என்ற சுயேச்சை வேட்பாளர் தன் தொகுதி மக்களுக்கு ஒரு ஜோடி காலணிகளை வாங்கித் தந்து பிரசாரம் செய்துள்ளார். இந்தத் தேர்தலில் தான் வெற்றி பெற்று சொன்ன வாக்கை நிறைவேற்றாவிட்டால் தான் வாங்கித் தந்த காலணிகளைக் கொண்டு தன்னை அடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.