வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (27/11/2018)

கடைசி தொடர்பு:17:20 (27/11/2018)

'நட்டநடு ரோட்டில் விபரீதம்!' - வைரலாகும் நில்லு நில்லு சேலஞ்ச்

சில மாதங்களுக்கு முன்பு வைரலான கிகி சேலஞ்ச் போல, தற்போது சமூக வலைதளங்களில் நில்லு நில்லு சேலஞ்ச் கேரளாவில் வைரலாகிவருகிறது. எப்படி நடக்கிறது இது?

நில்லு நில்லு சேலஞ்ச்

தலையில் தலைக்கவசம் அணிந்துகொண்டு, கைகளில் காய்ந்த இலைகளையோ, குச்சிகளையோ வைத்துக்கொண்டு, சாலையில் செல்லும் வாகனங்களைத் திடீரென்று வழிமறித்து வண்டியின் முன்பு நடனமாடி அதை வீடியோவாகப் பதிவுசெய்து, சமூக ஊடகங்களான டிக் டாக், ஃபேஸ்புக் போன்றவற்றில் பதிவிட்டு லைக்ஸ்களையும், ஷேர்களையும் அள்ளுவதே இந்த #NilluNilluChallenge

2004-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ரெயின் ரெயின் கம் எகெயன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நில்லு நில்லு என்ட நீலக் குயிலே' பாடல்தான் இதில் பயன்படுத்தப்படுகிறது. இப்பாடலில் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள், நட்டநடு சாலைகளில் படமாக்கப்பட்டவை. அதை அடிப்படையாக வைத்துதான் தற்போது இந்தப் பாடல் வைரலாகியிருக்கிறது. இந்த சேலஞ்சை சில இளைஞர்கள் போலீஸ் வாகனத்தை வழிமறித்துச் செய்துள்ளனர். இதனால், திருவனந்தபுரம் காவல் துறையினர் தங்களுடைய முகநூல் பக்கத்தில் " வாகனங்களை வழிமறிப்பவர்கள்குறித்து வாகன ஓட்டுநர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்"என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

விளையாட்டாக வழிமறிக்கச்சென்றாலும்கூட, திடீரென ஓட்டுநர் நிலைதவறி பிரேக் பிடிக்காமல் விட்டுவிட்டால் அவ்வளவுதான். இந்த ஆபத்தைப் புரிந்துகொள்ளாமல், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரிய விஷயம்.