‘லட்சக்கணக்கில் குவிக்கப்பட்ட காவலர்கள்!’ - தொடங்கியது 2 மாநில சட்டசபைத் தேர்தல் | madhya pradesh and mizoram election Polling begins

வெளியிடப்பட்ட நேரம்: 08:14 (28/11/2018)

கடைசி தொடர்பு:08:14 (28/11/2018)

‘லட்சக்கணக்கில் குவிக்கப்பட்ட காவலர்கள்!’ - தொடங்கியது 2 மாநில சட்டசபைத் தேர்தல்

மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 

மத்திய பிரதேசம் தேர்தல்

கடந்த மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். இதில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 227 தொகுதிகளிலும் மொத்தம் 5,04,95,251 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 65,367 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இவற்றில் 17,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளைச் சேர்த்து மொத்தம் 2800 பேர் வேட்பாளர்களாகக் களம் காண்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால் அங்கு மட்டும் 1.80 லட்சம் காவலர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் இன்று காலை 7 மணி முதல் 3 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மற்ற வாக்குச்சாவடிகளில் 8 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, அங்கு காங்கிரஸுக்கும் பா.ஜ.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பெரும் முனைப்பு காட்டி வருகிறது. 

மிசோரம்

இதே போன்று மிசோரம் மாநிலத்தின் 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் 7,70,395 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 209 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இங்கு இன்று காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் அடுத்த மாதம் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.