`ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு’- தருண் அகர்வால் குழு அதிர்ச்சி அறிக்கை | Sterlite closure is wrong said Justice Tarun Agarwal

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (28/11/2018)

கடைசி தொடர்பு:12:55 (28/11/2018)

`ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு’- தருண் அகர்வால் குழு அதிர்ச்சி அறிக்கை

`ஸ்டெலைட் ஆலையை மூடியது தவறு. அதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என நீதிபதி தருண் அகர்வால் குழு பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

 

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு. இதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்தக் குழு ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை நடத்தி மூடி சீலிடப்பட்ட கவரில் வைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இரு தினங்கள் முன்பு தாக்கல் செய்தது.

அறிக்கை தொடர்பான விசாரணை இன்று பசுமைத் தீர்ப்பாய நீதிபதி கோயல் தலைமையில் நடைபெற்றது. அப்போது, தருண் அகர்வால் குழு அறிக்கை தொடர்பாக விசாரணை நடந்தது. அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு, அதை ஏற்கமுடியாது எனக் கூறப்பட்டுள்ளது. ஆலையை மூடுவதற்கு முன்பு நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் அவர்கள் தரப்பு வாதங்களை கூற வாய்ப்பு கொடுத்து அதன் பிறகே ஆலை மூடப்பட்டிருக்க வேண்டும். ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை, ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க சில பரிந்துரைகளையும் தருண் அகர்வால் குழு அந்த அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது; ஆலையைத் திறக்க வேண்டும் என பசுமைத் தீர்பாயத்துக்கு பரிந்துரையும் செய்துள்ளது.

சீலிடப்பட்ட அறிக்கையை திறக்கும்போது, இந்த அறிக்கையை நாங்களே இன்னும் படிக்கவில்லை. இது இப்போதுதான் திறக்கப்படுகிறது. அதனால் அறிக்கையை முழுவதும் படித்து புரிந்துகொள்ள கால அவகாசம் வேண்டும் என நீதிபதி கோயல் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என முதலில் பசுமைத் தீர்பாயத்தில் வழக்கு தொடர்ந்த பாத்திமா மற்றும் ராஜா ஆகியோர் தருண் அகர்வாலின் அறிக்கை நகலைக் கேட்டிருந்தனர். ஆனால். அவர்களுக்கு அறிக்கை நகலை அளிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார். 

இறுதியில் இந்த அறிக்கை தொடர்பாக ஒருவார காலத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழக மாசுக் கட்டுபாட்டு வாரியமும் பதில் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.