வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (28/11/2018)

கடைசி தொடர்பு:17:16 (28/11/2018)

ஆன்லைன் வர்த்தகம் - ஃப்ளிப்கார்ட்டை முந்திய அமேசான்! 

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியச் சந்தையில் காலூன்றிய ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், ஃப்ளிப்கார்ட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

அமேசான் - ஃப்ளிப்கார்ட்

அமேசானுக்கும், ஃப்ளிப்கார்டுக்கும் இடையே இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், 2018, மார்ச் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அமேசானின் விற்பனை 7.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. அதே சமயம் அதன் போட்டி நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனை 6.2 பில்லியன் டாலராக உள்ளதாக பார்க்லே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்தக் கணக்கில் ஃப்ளிப்கார்ட்டின் துணை நிறுவனமான மைன்ட்ரா மற்றும் ஜெபாங் ஆகியவற்றின் விற்பனை கணக்கு சேர்க்கப்படவில்லை. 

2016-17 ம் நிதியாண்டில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இடையே விற்பனையில், ஏறக்குறைய சம அளவில் போட்டி நிலவி வந்த நிலையில், 2017-18-ம் நிதியாண்டில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அமேசான் முந்தியுள்ளது. 

ஃப்ளிப்கார்ட்டுக்குப் பின்னடைவு

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை, கடந்த மே மாதம் வால்மார்ட் அறிவித்தபோது ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் விற்பனை 2018-ம் நிதியாண்டில் 7.5 பில்லியன் டாலராக இருக்கும் எனத் தெரிவித்திருந்தது. 

சர்வதேச அளவில் இந்தியா மிகப் பெரிய நுகர்வுச் சந்தையாக இருப்பதால்தான், அமெரிக்காவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், 16 பில்லியன் டாலர் முதலீட்டில் ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவிகித பங்குகளைக் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை, சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூரில் தொடங்கினார்கள். வெறும் 4 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு கம்ப்யூட்டர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை, அவர்கள் இருவரும் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக உருவாக்கினர். 

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் 77 சதவிகிதப் பங்குகளை உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் அண்மையில் வாங்கி, அதைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. அப்போதே அந்த நிறுவனத்திலிருந்து சச்சின் பன்சால் வெளியேறிய நிலையில், ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பின்னி பன்சால், பணியாற்றிவந்தார். இந்த நிலையில், பாலியல் புகார் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து பன்சாலும் அப்பதவியிலிருந்து அண்மையில் விலகியது அந்த நிறுவனத்துக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க