``ராணுவ வீரர்களைவிட அதிகாரத்தில்தான் காங்கிரஸுக்கு அக்கறை!” - பிரதமர் மோடி விமர்சனம் | congress only interest in power not in our military - prime minister modi says

வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (29/11/2018)

கடைசி தொடர்பு:07:27 (29/11/2018)

``ராணுவ வீரர்களைவிட அதிகாரத்தில்தான் காங்கிரஸுக்கு அக்கறை!” - பிரதமர் மோடி விமர்சனம்

இந்திய ராணுவ வீரர்களைக் கொலை செய்யும் நக்ஸலைட்டுகளை ‘புரட்சியாளர்கள் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அழைக்கிறார்கள். ஓட்டுக்காக இவ்வளவு கீழாக இறங்கிவிட்ட காங்கிரஸுக்கு ஓட்டுப் போடாமல் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தன்னுடைய தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி


ராஜஸ்தானில் 200 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மிகத் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

புதன்கிழமை (28.11.2018) பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``காங்கிரஸின் தொண்டர்களும் அதன் மாநிலங்களவை உறுப்பினர்களும் நக்ஸலைட்டுகள் மற்றும் மாவோஸ்டுகளைப் புரட்சியாளர்கள் என்று அழைக்கின்றனர். எல்லையில் நமது ராணுவ வீரர்களைக் கொன்று கொண்டிருக்கும் இவர்களைப் இப்படி அழைப்பதன்மூலம் இவர்களுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதைக் காட்டியுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர், ``2014-க்கு முன்னான அவர்களது ஆட்சியில் அயோத்தி, அஜ்மீர், வாரணாசி, மும்பை போன்ற நகரங்களில் மட்டுமல்லாமல் ரயில்கள், கோயில்கள், ஹோட்டல்கள் என அனைத்து இடங்களிலும் எல்லா நாளிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் இவையெல்லாம் தடுத்து நிறுத்தப்பட்டன” என்றார். 

“நமது வீரர்கள் ஆயுதங்களுடனும் வெடிபொருள்களுடன் சென்றார்கள். அவர்கள் கையில் கேமாராவை எடுத்துக்கொண்டு செல்லவில்லை. நாட்டுக்காக ராணுவ வீரர்களால் நிகழ்த்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக்கிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கூட காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு இல்லை. அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தின்மீது மட்டும்தான் ஆர்வம்” என்று சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை விமர்சித்த காங்கிரஸுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

“நான்கு தலைமுறையாக ஆட்சியிலிருந்த அவர்கள் நாட்டைக் கெடுத்துவிட்டார்கள். அவர்கள் செயல்பட்ட விதத்தை எடுத்துப்பார்த்துவிட்டு வாக்களியுங்கள். அது உங்கள் கடமையும் கூட” எனக் கூறியுள்ளார்.

டிசம்பர் 7-ம் தேதி நடக்கும் வாக்குப் பதிவைத் தொடர்ந்து டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது.


[X] Close

[X] Close