வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (29/11/2018)

கடைசி தொடர்பு:08:50 (29/11/2018)

`கர்தார் மகிழ்ச்சி; இதற்காக பாக்.வுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியாது’ - சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டம்

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய புனிதத் தலத்துக்கும், இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் புனிதத் தலத்துக்கும் இடையேயான புதிய வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ``கர்தார் பாதை முயற்சி எடுக்கப்பட்டதாலேயே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராகிவிடாது” என்று பேசியுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ்


இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள 20-வது சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தான் இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ``தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளும்வரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவே மாட்டார்” என்று பதிலளித்துள்ளார்.

மேலும், ``இஸ்லாமாபாத்திலிருந்து இந்தியாவின்மீது தீவிரவாதச் செயல்களைத் தூண்டிவிடுவதைப் பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளும்போது அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இந்தியா தானாகத் தயாராகும். பல ஆண்டுகளாக கர்தார்பூர் சாலை அமைக்க இந்தியா பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டு வந்தது. இப்போதுதான் அதற்கு பாகிஸ்தான் செவி சாய்த்துள்ளது. இதற்காகச் சந்தோஷப்படலாமே தவிர ஒரு சாலையை அமைக்க ஒப்புக்கொண்டதால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது” என்றும் கூறியுள்ளார்.