வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (29/11/2018)

கடைசி தொடர்பு:09:10 (29/11/2018)

` சபரிமலையை அயோத்திபோல் மாற்ற அனுமதிக்க முடியாது’ - பினராயி விஜயன் காட்டம்

சபரிமலை கோயிலை அயோத்தி விவகாரம்போல் மாற்ற அனுமதிக்க முடியாது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

பினராயி விஜயன்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து சபரிமலையில் இன்னும் அதற்கான எதிர்ப்பு அலைகள் வீசி வருகின்றன. இன்னும் பல எதிர்க்கட்சிகளும், இந்து அமைப்புகளும் பொதுமக்களும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று கேரள சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்றும் அந்தப் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவைத் திரும்ப பெற வேண்டும் எனவும் கோஷமிட்டனர். கேள்வி நேரம் நடைபெற்ற ஒரு மணிநேரமும் எதிர்க்கட்சியினர் சபரிமலை விவகாரம் குறித்தே முறையிட்டனர். 

சபரிமலை கோயிலின் நடைமுறைகளுக்கு எதிராக இடதுசாரிகள் செயல்படுவதாக முன்னாள் தேவசம் அமைச்சர் சிவக்குமார் குற்றம்சாட்டினார். அதற்குப் பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ``கோயில் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைத் திரும்பப் பெறமுடியாது'' எனக் கூறினார். மேலும் அவர், ``எந்த நிலையிலும் சபரிமலைக் கோயிலை அயோத்தி பிரச்னைபோல் மாற்ற கேரள அரசு அனுமதிக்காது மேலும் தடை உத்தரவைத் திரும்ப பெறும் கேள்விக்கே இடமில்லை. கேரள உயர்நீதிமன்றமும் சபரிமலையில் இப்போது நடைமுறையில் உள்ள விதிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் சபரிமலை விவகாரத்தை அரசியலாக்க முயல்கிறார்கள்” என மிகவும் காட்டமாகப் பேசினார்.