`சென்டினல் தீவுக்கு மீண்டும் தடை?’ - பழங்குடிகள் ஆணையம் அந்தமானில் ஆய்வு | Restricted Area Permit may be reimposed in North Sentinel island

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (29/11/2018)

கடைசி தொடர்பு:10:35 (29/11/2018)

`சென்டினல் தீவுக்கு மீண்டும் தடை?’ - பழங்குடிகள் ஆணையம் அந்தமானில் ஆய்வு

சென்டினல் தீவு


‘சென்டினல் தீவு’ வெளியுலகத்தினர் அதிகம் கேள்விப்படாத இந்தப் பெயர் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டதற்குப் பிறகு அனைவராலும் அறியப்பட்டுள்ளது. அந்தமானுக்கு அருகே உள்ள இந்தத் தீவு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்டினல்கள் என்ற பழங்குடியினர் இந்தத் தீவில் வசிப்பதால் இந்தப் பெயராலே இது அழைக்கப்படுகிறது. அந்தமானில் உள்ள 29 தீவுகளைத் தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இந்திய அரசு அறிவித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இதற்கான தடையை அரசு நீக்கியது. அந்தமான் நிர்வாகத்திடம் உரிய அனுமதிபெற்ற பின்னரே இந்தப் பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் என்ற இளைஞர் தடை செய்யப்பட்ட அந்த வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்றார். சென்டினல்கள் பழங்குடியினரால் அவர் கொலையும் செய்யப்பட்டார். இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்டினல் தீவுக்கு யாரும் போகக்கூடாது என்ற உத்தரவும் இன்று வரை இருக்கிறது .தீவைச் சுற்றிய மூன்று கடல் மைல்களைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்திருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்தமான் நிக்கோபர் நிர்வாகம் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள தீவுகளுக்கு விதிமுறைகளை மீறிச் செல்வதாக கூறப்படுகிறது. ஆலன் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு தேசிய பழங்குடியின ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வரும் டிசம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஆய்வு செய்து களஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்தமான் பகுதிகளில் இதுவரை 44 விதிமீறல்கள் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  29 தீவுகளில் தடை நீக்கியது தொடர்பாக மீண்டும் ஆலோசனை செய்யவுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆலன் உடலைக் கைப்பற்ற அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகள் சென்டினல் தீவின் அமைதியைக் கெடுப்பதாக அமைந்துவிடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். கள ஆய்வுக்குப் பின்னர் இந்தத் தீவுப் பகுதிக்கு வெளியாட்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்படலாம் எனத் தகவலும் வெளியாகியுள்ளது.