`அனுமன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்!’ - யோகியின் சர்ச்சைப் பேச்சுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் | UP CM Yogi Adityanath get legal notice for his controversy speech about hanuman

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:16:00 (29/11/2018)

`அனுமன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்!’ - யோகியின் சர்ச்சைப் பேச்சுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கடவுள் அனுமனை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சையான முறையில் விமர்சித்ததால், அவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

யோகி

'மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடைபெறும்' என கடந்த மாதம் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி மிசோரம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. 

இதையடுத்து, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலத்துக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இந்த இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “ அனுமன் காட்டுவாசியாக வாழ்ந்தவர். அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். பஜ்ரங் பலி அமைப்புதான் வடகிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் அனைத்து அமைப்புகளையும் ஒன்றுசேர்த்துவருகிறது. இதுவே ராமரின் ஆசையாகவும் இருந்தது. வாழ்நாள் முழுவதும் இதைச் செய்யவே நாங்கள் விரும்புகிறோம். எனவே, அனைவரும் ராம பக்தருக்கு வாக்களிக்க வேண்டும் ராவணனுக்கு அல்ல” என்று பேசியுள்ளார். 

யோகியின் பேச்சு, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே, ராஜஸ்தான் சர்வ பிராமின் மஹாசபா அமைப்பின் முதல்வர் சுரேஷ் மிஸ்ரா, உத்தரப்பிரதேச முதல்வருக்கு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளார். “கடவுள் அனுமான் குறித்த உ.பி முதல்வரின் கருத்து வருத்தமளிக்கிறது. அது, மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது. அரசியலுக்காக கடவுளை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close