சபரிமலையில் 11 நாள்களில் ரூ.26 கோடி இழப்பு..! தேவசம் போர்டு அதிர்ச்சி | Sabarimala temple income falls, Devsam board in shock

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (29/11/2018)

கடைசி தொடர்பு:17:47 (29/11/2018)

சபரிமலையில் 11 நாள்களில் ரூ.26 கோடி இழப்பு..! தேவசம் போர்டு அதிர்ச்சி

சபரிமலை வரலாறு காணாத வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

சபரிமலையில் 11 நாள்களில் ரூ.26 கோடி இழப்பு..! தேவசம் போர்டு அதிர்ச்சி

பரிமலைக்குப் பெண்கள் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பெண் சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் கோயிலுக்குச் செல்ல முயன்றாலும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இதுவரை ஒரு பெண் கூட மலை ஏறி ஐயப்பனைத் தரிசனம் செய்ய முடியவில்லை. கொச்சியைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற சமூகச் செயற்பாட்டாளர் மலை ஏற முயன்றார். ஆனால், சந்நிதானத்தில் தந்திரிகள் நடத்திய போராட்டத்தால் கடைசி நேரத்தில் அவரால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் போனது. 

இதற்கிடையே, ஐயப்ப பக்தர்கள் விரத உடையுடன் இருக்கும் கவர்ச்சிப் படம் ஒன்றை ரெஹைனா ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்தனம்திட்டா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது. இந்தப் புகாரில் இரு நாள்களுக்கு முன் ரெஹானா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பணி புரிந்து வந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் அவரை சஸ்பெண்டு செய்துள்ளது. இப்படித் தொடர்ந்து சர்ச்சைகள், பதற்றமான சூழல் நிலவுவதால் பக்தர்கள் பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர். இதனால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. சபரிமலைக்குக் கிடைத்து வந்த வருவாயும் சரிந்துள்ளது.

சபரிமலை கோயிலில் வருவாய் இழப்பு

கடந்த காலங்களில் சபரிமலைக்குக் கிடைத்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே வந்துள்ளது. கடந்த மகரவிளக்கு சீசனில் சபரிமலைக்கு 255 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. 2017-ம் ஆண்டைவிட இது 45 கோடி அதிகம். அரவணா பாயசம் விற்பனை, அறை வாடகை, நெய் அபிஷேகம், பிரசாதம் விற்பனை, சந்நிதானத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை போடுவது போன்றவை சபரிமலை வருவாய்க்கான முக்கியக் காரணிகள். இந்தியாவில் பணக்காரச் சாமியாகப் பார்க்கப்படும் திருப்பதி வேங்கடாச்சலாபதிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டும் கோயிலாக சபரிமலை கருதப்பட்டது. சமீப காலமாக சபரிமலையில் நிலவும் பதற்றம் ஒருவித பாதுகாப்பற்றதன்மையை பக்தர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் பக்தர்களிடம் நடந்து கொள்ளும் விதம் சில சமயங்களில் அராஜகமாக உள்ளது. இதனால், பாதுகாப்பு என்ற பெயரில் போலீஸார் நிகழ்த்தும் கெடுபிடிகளுக்குக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சபரிமலை

வழக்கமாக நவம்பர் முதல் ஜனவரி 15-ம் தேதி வரை மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை நடை திறக்கப்படும். இந்தச் சமயத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 50,000 முதல் 1,00,000 வரை பக்தர்கள் மலை ஏறுவார்கள். தற்போது, 45,000 முதல் 50,000 வரையே பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் திறக்கப்பட்டு 11 நாள்கள் ஆகின்றன. இந்த 11 நாள்களில் மட்டும் ரூ.26 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. சபரிமலைக்கு முக்கிய வருவாய் தருவது அரவணா பாயசம்தான். அரவணா விற்பனையில் ரூ.11.99 கோடி விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது. காணிக்கை ரூ.6.85 கோடி குறைந்துள்ளது. அப்பம் விற்பனை ரூ.2.45 கோடிக்கு இறங்கியுள்ளது. அறை வாடகை ரூ.50.62 லட்சமாகக் குறைந்துள்ளது.

சபரிமலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு வருவாய் இழப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் 1200- க்கும் மேல் கோயில்கள் உள்ளன. அதில் சபரிமலை, மாவேலிக்கரா செட்டிக்குளக்கார தேவி கோயில், எட்டுமானுர் சிவன் கோயில், மலையாளப்புழா தேவி கோயில் முக்கியமானவை. கோயில்கள் வழியாக ஆண்டுக்கு ரூ. 390 கோடி வருவாய் திருவிதாங்கூர் தேவசம் போர்டு பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சபரிமலையில் நிலவி வரும் பதற்றத்தைக் குறைக்கக் கேரள தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் பக்தர்கள் சபரிமலைக்குப் பயமில்லாமல் வருவார்கள் என்று தேவசம் போர்டு அதிகாரிகள் சொல்கிறார்கள். கேரள அரசு காது கொடுக்குமா? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்