வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (29/11/2018)

'மினிமம் ரீசார்ஜ்' செய்யாதவர்களின் சிம் கார்டுகளை டிஆக்டிவேட் செய்யக் கூடாது! - ட்ராய்

ர்டெல், வோடஃபோன் ஆகிய இரு நிறுவனங்களும், கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந்து புதிய கட்டண விகிதங்களை அறிவித்தன. இதன்படி, அக்கவுன்ட்டில் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, மாதந்தோறும் குறைந்தது 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யவேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டனர். இந்த மினிமம் ரீசார்ஜ் திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பவே, பலரும் ட்ராயிடம் புகார்செய்தனர். இதைத்தொடர்ந்து, இந்தப் பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சந்தித்துப் பேசிய ட்ராய், இந்நிறுவனங்களுக்குப் புதிய கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது.

ட்ராய்
 

 அதன்படி, அடுத்த 72 மணி நேரத்திற்குள் ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இந்தப் புதிய கட்டண விவரங்கள்குறித்து தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை, தற்போது வாடிக்கையாளர்கள் அக்கவுன்ட்டில் இருக்கும் தொகை ஆகிய இரண்டு குறித்தும் அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும். மேலும், இந்த மினிமம் ரீசார்ஜ் செய்யாதவர்களின் சிம் கார்டுகள், குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு தானாக டிஆக்டிவேட் ஆகிவிடும் என்ற அம்சத்தையும் மாற்றச்சொல்லியிருக்கிறது ட்ராய். அதாவது, ஒருவரின் அக்கவுன்ட்டில், அந்த நிறுவனம் குறிப்பிடும் அளவுக்கு மினிமம் பேலன்ஸ் இருந்தாலே போதும்; அதை டிஆக்டிவேட் செய்யக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

ட்ராய்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, "தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண விவரங்களில் ட்ராய் எப்போதும் தலையிடாது. அதேவேளை, போதுமான பேலன்ஸ் இருந்தும் மினிமம் ரீசார்ஜ் செய்யச்சொல்வதும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் எனச் சொல்வதும் சரியில்லை" என்று கூறியிருக்கிறார்.