டெல்லி விவசாயிகள் பேரணியில் எதிரொலித்த கஜா புயல் பாதிப்பு! | Gaja disaster gets noticed in Delhi farmers protest

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (30/11/2018)

கடைசி தொடர்பு:11:03 (30/11/2018)

டெல்லி விவசாயிகள் பேரணியில் எதிரொலித்த கஜா புயல் பாதிப்பு!

டெல்லி விவசாயிகள் பேரணியில் எதிரொலித்த கஜா புயல் பாதிப்பு!

மிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயலால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது பற்றி இன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பேசப்பட்டது. 

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், தொழிலாளர் சங்கங்கள் என 207 சங்கங்களைக் கொண்ட கூட்டமைப்பின் சார்பில், டெல்லியில் நேற்றும் இன்றும் (நவ.29, 30) விவசாயிகள் பேரணி- போராட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. 

விவசாயி பேரணி

தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், அரியானா உட்பட நாட்டின் பல திசைகளிலிருந்தும் விவசாயிகள் டெல்லிக்குச் சென்றுள்ளனர். நேற்று காலை முதலே டெல்லி புறநகர்ப் பகுதிகளில் திரண்டுவரும் விவசாயிகள், ஆனந்தவிகார், நிஜாமுதீன், பிஜ்வாசான் ரயில்நிலையங்கள் மற்றும் சப்ஜிமண்டி ஆகிய நான்கு இடங்களிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு ராம்லீலா மைதானத்தை நோக்கிச் சென்றனர். 

அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் திட்டப்படி, நேற்று ராம்லீலாவில் திரண்ட விவசாயிகள், அங்கிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணியாகச் செல்கிறார்கள். 

இந்த இரண்டு நாள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை, விவசாயிகளின் பிரச்னையை விவாதிப்பதற்காக உடனடியாக 3 வார நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதாகும். அந்தக் கூட்டத்தில், விவசாயிகள் தொடர்பாக மாநிலங்களவையில் சிபிஎம் கட்சியின் கேரள எம்.பி. ராஜேஷும் மக்களவையில் மகாராஷ்டிர எம்.பி. ராஜு ஷெட்டியும் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்களை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு, தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்பதும் விவசாயிகள் போராட்டத்தின் உள் அம்சம் ஆகும். 

விவசாயி பேரணி

நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு முதன்மையான காரணமாக இருக்கும் கடன் சுமையைத் தீர்ப்பதற்காக, ஒரே முறையில் விவசாயக் கடன் தள்ளுபடி என மத்திய அரசு அறிவிக்கவேண்டும்; விவசாய விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய ஆணையத்தின் பரிந்துரை விலையை அறிவிக்கவேண்டும் என்று நாடு முழுவதுமிருந்து வந்துள்ள இந்த விவசாயிகள் ஒரே குரலில் கோரிக்கைவைக்கின்றனர். 

பேரணியில் சென்றவர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டும் கோரிக்கை முழக்கங்களையும் உரக்க ஒலித்துக்கொண்டும் உற்சாகமாகப் பங்கேற்றனர். 

நேற்று மாலை ராம்லீலா மைதானத்தை நோக்கிப் பேரணி தொடங்கியபோது, தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தற்கொலை தொடர்பாகவும் பிற மாநில விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பேசினர். 

விவசாயி பேரணி

கடந்த மார்ச்சில் மகாராஷ்டிர மாநிலத்தில், விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலையை நிர்ணயம்செய்ய வேண்டும் என்பது உட்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, நாசின் நகரத்திலிருந்து மும்பைவரை பத்தாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி சென்றது, நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்தது. முன்னதாக, அந்தப் பேரணி குறித்து விஷமிகளின் வேலை என்று மாநில அரசு கூறியிருந்த நிலையில், அந்த சமயத்தில் மும்பையில் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல், அமைதியாகவும் கட்டுக்கோப்பாகவும் மகாராஷ்டிர விவசாயிகள் தங்களின் பேரணியை நடத்தினர். 

அந்தப் பேரணியைவிட இந்த டெல்லிப் பேரணி பெரியதாகக் காணப்படுகிறது. இதில் பங்கேற்கும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒரு  லட்சமாக இருக்கும் என்று செய்தியாளர்களிடம் கூறினார், சுவராஜ் அபியான் அமைப்பின் நிறுவனரான யோகேந்திர யாதவ். 

நிகழ்ச்சியில் பேசிய விவசாய சங்கத் தலைவர்கள், ``கடந்த 20 ஆண்டுகளாக நாடளவில் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலைசெய்து இறந்துபோயுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளின் தற்கொலை தொடர்பான புள்ளிவிவரத்தை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடாமல் இருந்துவருகிறது. உண்மையான தகவல்களை வெளியிட்டால் மிக மோசமான நிலைமை வெளியில் தெரிந்துவிடும்” என்று குறிப்பிட்டனர். 


டிரெண்டிங் @ விகடன்