நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் 29 மாநில விவசாயிகள்!- ஸ்தம்பிக்கும் தலைநகரம் | farmers protest in delhi who are asking for debt relief among other demands

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (30/11/2018)

கடைசி தொடர்பு:13:40 (30/11/2018)

நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் 29 மாநில விவசாயிகள்!- ஸ்தம்பிக்கும் தலைநகரம்

நாடாளுமன்றத்தை நோக்கி ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பேரணி மேற்கொண்டுள்ளனர். 

விவசாயிகள்

விளை பொருள்களுக்கு உரியவிலை, பயிர்க் காப்பீடு, பயிர்க் கடன் தள்ளுபடி, விவசாயிகள் தற்கொலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 29 மாநில விவசாயிகள் இணைந்து டெல்லியில் இரண்டு நாள் பேரணி நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக டெல்லி ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். 29 மாநிலத்திலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் பங்கேற்றுள்ள இந்தப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். நேற்று காலை டெல்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தமிழக விவசாயிகள் அங்கேயே ரயில் மறியல் செய்தனர். பின்னர், போலீஸாரால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ரயில்வே ஸ்டேஷன் முதல் ராம்லீலா மைதானம் வரை அரைநிர்வாணமாக மண்டைஓடு, எலும்புகளுடன் ஊர்வலமாகச் சென்றனர்.

`கடனில்லா விவசாயி, தற்கொலை இல்லா இந்தியா' என்ற முழக்கத்தை முன்வைத்து விவசாயிகள் பேரணியை முன்னெடுத்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளதால் டெல்லி பிரதான சாலைகள் ஸ்தம்பித்துள்ளன. இங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்கச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட பேரணியில் பங்கேற்றுள்ள விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோன்று கடந்த அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் விவசாயிகள் தடையை மீறி பேரணி நடத்திய போது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடித்த நிலையில் தற்போதும் விவசாயிகள் மிரட்டல்களைச் சந்தித்து வருவதாகக் கூறி அதிரவைத்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க