வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (30/11/2018)

கடைசி தொடர்பு:14:15 (30/11/2018)

வேறு மாநிலத்தவருக்கு குஜராத் வைத்த `செக்’... தமிழக மருத்துவ கவுன்சிலுக்கு ஒரு கோரிக்கை!

2017-ம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போது, தமிழக மருத்துவக் கலந்தாய்வில் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாய்ப்பைப் பெற்றனர். இந்த ஆண்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

வேறு மாநிலத்தவருக்கு குஜராத் வைத்த `செக்’...  தமிழக மருத்துவ கவுன்சிலுக்கு ஒரு கோரிக்கை!

``குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசு முறையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததால் ஏழை மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்" என்று கதறுகிறார், பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி.

தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்று மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்போது, வேறு மாநிலங்களில் படித்த மாணவர்கள் பெரும்பாலான இடங்களைத் தட்டிப் பறிப்பது தொடர்ந்து வருகிறது. ஆனால், குஜராத் மருத்துவ கவுன்சில் தெளிவான விதிமுறை வகுத்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், குஜராத்திலேயே பத்து வருடம் படித்திருந்தால் மட்டுமே மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும். பத்து ஆண்டுகள் அங்குப் படிக்காமல், இருப்பிடச் சான்றிதழ் மட்டுமே வழங்கினால் ஏற்றுக்கொள்ள முடியாது. மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள், குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

குஜராத்

`மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள நடைமுறையைத்தான் மாணவர்கள் பின்பற்ற வேண்டும். பத்து ஆண்டுகள் குஜராத்தில் வசித்தால் மட்டும் போதாது. பத்து ஆண்டுகள் குஜராத்தில் படித்திருக்க வேண்டும் என்ற மருத்துவ கவுன்சிலின் முடிவு சரியானதே’ என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குத் தொடுத்த மாணவர்களின் பெற்றோர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக தாங்கள் குஜராத்தில் வசித்து வருவதற்கான சான்றிதழைச் சமர்ப்பித்திருந்தனர். ஆனால், நீதிபதி ஜே.பி பர்டிவாலா, `சேர்க்கைக்கான விதிமுறையில் இனி மாற்றம் செய்ய முடியாது’ என்று மாணவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். 

`பெற்றோர்கள் இருப்பிடச் சான்றிதழ் வழங்கினாலே போதும். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நான்கு ஆண்டுகள் தொடர்ந்து தமிழகத்தில் படித்திருந்தால், மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்’ என்ற விதிமுறையே தமிழ்நாட்டில் உள்ளது. இதனால்,  20, 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வேறு மாநிலங்களில் நல்ல வசதியுடன் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் கூட, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும், இருப்பிடச் சான்றிதழையும் காண்பித்து தமிழ்நாட்டில் மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். இதனால், தமிழ்நாட்டிலேயே படித்த மாணவர்களுக்கான வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுகிறது. 

குஜராத்

பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ``மற்ற மாநிலங்களில் நுழைவுத்தேர்வு மூலமாகவே மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். 2017-ம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாய்ப்பைப் பெற்றனர். இந்த ஆண்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். 2017-ம் ஆண்டு நான் மருத்துவக் கவுன்சலிங்கில் கலந்துகொண்டபோது, தமிழே தெரியாத மாணவர்கள்தான் அதிகளவில் கலந்துகொண்டனர். இவர்களில் பலரும் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதனால், எனக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு பதிலாக, அரசு ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது. 

தனியார் சுயநிதி கல்லூரியில் மருத்துவக் கல்விக் கட்டணம் 3.85 லட்சம் ரூபாய் என்று அரசு நிர்ணயித்திருந்தாலும், கல்லூரியில் ஆண்டுக்கு 6.50 லட்ச ரூபாய் வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதனால், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த என்னால் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறேன். ஆனால், வசதியுள்ளவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் 13,600 ரூபாய் கட்டணம் செலுத்திப் படிக்கிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் படித்துவிட்டு, மீண்டும் தங்கள் பெற்றோர் வசிக்கும் மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள். இதனால், தமிழகத்துக்கு எந்தவிதமான பயனும் இல்லை. குஜராத் அரசு பின்பற்றுவதுபோல், இனியாவது தமிழக அரசு தெளிவான வரைமுறையை வகுத்து தமிழக மாணவர்களுக்கு அதிகளவில் வாய்ப்பை வழங்க ஏற்பாடு வேண்டும்” என்றார். 

இனியாவது, தமிழக மாணவர்களுக்கு அதிக அளவு இடம் கிடைக்கும் வகையில் தமிழக மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை மாற்ற வேண்டியது அவசியம். நீட் தேர்வைத் தடுக்க முடியாத தமிழக அரசு, இதையாவது செய்யுமா?