தெலங்கானா காங்கிரஸின் செயல் தலைவராக முகமது அசாருதீன் நியமனம்! | Azharuddin named Telangana Congress working president

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (30/11/2018)

கடைசி தொடர்பு:15:40 (30/11/2018)

தெலங்கானா காங்கிரஸின் செயல் தலைவராக முகமது அசாருதீன் நியமனம்!

தெலங்கானா காங்கிரஸின் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

முகமது அசாருதீன்

119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தெலங்கானா சட்டப்பேரவையின் ஆயுள்காலம் அடுத்த ஆண்டு மார்ச் வரை இருந்தபோதும், சட்டப்பேரவையை முன்னதாகவே கலைக்க முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆளுநருக்குப் பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்தார். இதையடுத்து அங்கு டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. 

தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது அசாருதீனை அக்கட்சித் தலைமை நியமித்திருக்கிறது. அதேபோல், துணைத் தலைவர்களாக பி.எம்.வினோத் குமார் மற்றும் ஜாஃபர் ஜவேத் ஆகியோரை நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டிருக்கிறார். கட்சித் தலைமை தன்னை நடத்தும் முறை குறித்து அசாருதீன் அதிருப்தி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவருக்குப் புதிய பதவி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீன், உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் மக்களவைத் தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு போட்டியிட்டு வென்றார். அதன் பின்னர், 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானின் டோங்க் - சவாரி மாதோபூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.