ஜிஎஸ்டி வரி: ஏடிஎம், காசோலை பயன்பாட்டுக்கும் இனி கட்டணம்! | GST on banks' 'free services' may be passed on to customers

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (30/11/2018)

கடைசி தொடர்பு:16:40 (30/11/2018)

ஜிஎஸ்டி வரி: ஏடிஎம், காசோலை பயன்பாட்டுக்கும் இனி கட்டணம்!

ங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க பெரும்பாலான வங்கிகள் ஒப்புக்கொண்டுள்ளதால், இனி ஏடிஎம், காசோலை பயன்பாட்டுக்கும் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். 

ஏடிஎம்

வங்கிகள், வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலைப் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது, "வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. அதேபோல ஏடிஎம் இயந்திரங்களை ஜிஎஸ்டி-யில் பதிவு செய்யத் தேவையில்லை. ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் அளிக்கும் சேவைகள் ஆகியவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி இல்லை" எனத் தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைகளான ஏடிஎம், காசோலை பயன்பாடு, பெட்ரோல், டீசலுக்கான மிகை வரியைத் (சர் சார்ஜ்) திரும்ப அளித்தல் மற்றும் கூடுதல் கிரெடிட் கார்டு பயன்பாடு ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி கேட்டு வரித் துறை தரப்பிலிருந்து வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுவந்தன. 

இதைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குக்கூட மேற்கூறிய சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த, ஏறக்குறைய பெரும்பாலான வங்கிகள் ஒப்புக்கொண்டுள்ளன. அதே சமயம், அந்த வரியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவது குறித்துப் பரிசீலித்துவருவதாக இந்திய வங்கிகள்  சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதே சமயம், இலவச சேவை என்பது எது என்பதை ஒவ்வொரு வங்கியும் தங்களுக்கு ஏற்ப முடிவுசெய்யும் என்பதால், மேற்கூறிய சேவைகளுக்கான கட்டணம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். இதனிடையே, இந்த வரி விதிப்புக்கு ஒப்புக்கொண்டால், வங்கித் துறைகள் அளிக்கும் மற்ற சேவைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அடுத்ததாக வரக்கூடும் என்று வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜிஎஸ்டி வரி தொடர்பான நோட்டீஸ் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட அனைத்து முன்னணி வங்கிகளுக்கும், டிஎஸ்பி வங்கி மற்றும் சிட்டி பேங்க் உள்ளிட்ட இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இலவச சேவைகளுக்கான இந்த வரி விதிப்புக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே தேவையற்ற மோதல்களும் சிக்கல்களும் ஏற்படுவதோடு, இதேபோன்ற நோட்டீஸ் தொலைதொடர்புத் துறை, ரியல் எஸ்டேட் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கும்  அனுப்பப்படுவதற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க