வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (30/11/2018)

கடைசி தொடர்பு:19:53 (30/11/2018)

``சந்திரமுகியைக் கடத்தியவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை!” வழக்கறிஞர் வசுதா நாகராஜ்

``சந்திரமுகி எங்களிடம் வந்தடைந்ததும் நாங்கள் விசாரித்தோம். அவரைக் கடத்தி, மிரட்டியிருக்கின்றனர். தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது என்பதற்காகத்தான் அவரைக் கடத்தி மிரட்டியிருக்கிறார்கள். அதில் எந்தச்  சந்தேகமும் இல்லை.”

``சந்திரமுகியைக் கடத்தியவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை!” வழக்கறிஞர் வசுதா நாகராஜ்

தெலங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன அம்மாநில கட்சிகள். இதற்கிடையில் கடந்த 27ம் தேதி, கோஷ்மஹால் தொகுதியில் பகுஜன் இடது முன்னணி சார்பாகப் போட்டியிடும் திருநங்கை சந்திரமுகி காணாமல் போனது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பன்ஜாரா ஹில்ஸ் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு திருநங்கையைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்க, 28ம் தேதி இரவு காவல் நிலையத்துக்கு வந்து ஆஜரானார் சந்திரமுகி. அத்தோடு, ஹைதராபாத் நீதிமன்றத்தில் தனக்கு என்ன நடந்தது என்பது பற்றி சாட்சியளித்திருக்கிறார் சந்திரமுகி. இதைத் தொடர்ந்து, தேர்தல் பணிகள் முடியும்வரை, சந்திரமுகிக்குக் காவல்துறை முழுப் பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்திரமுகி

இதுகுறித்து, சந்திரமுகியின் வழக்கறிஞர் வசுதா நாகராஜிடம் பேசினேன். ``தெலங்கானா தேர்தலில் போட்டியிடும் ஒரே வசுதாதிருநங்கை. சந்திரமுகி. அவரின் முடிவே பலரையும் கோபமடைய வைத்திருக்கிறது. சந்திரமுகி காணாமல் போன மறுநாள் அவரின் தாயார்  மூலம் நீதிமன்றத்தில் நாங்கள் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தோம். அதில், தன் மகளை இதற்கு முன்பு கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், வெங்கட் யாதவ் என்பவர் மீது தனக்குச் சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சந்திரமுகி எங்களிடம் வந்தடைந்ததும் நாங்கள் விசாரித்தோம். அவரைக் கடத்தி, மிரட்டியிருக்கின்றனர். தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது என்பதற்காகத்தான் அவரைக் கடத்தி மிரட்டியிருக்கிறார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் ஒரு திருநங்கை என்பதால், காவல்துறையினர் மிகவும் மெத்தனமாகத்தான் செயல்படுகின்றனர். உயர் நீதிமன்றம்தான் இதில் விரைந்து முடிவெடுத்து, அவருக்கு முழுக் காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளது!”, என்று தெரிவித்தார்.

சந்திரமுகி

இந்நிலையில், சந்திரமுகி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமுலத்தில், ``அருகில் இருக்கும் ஏ.டி.எம்-ல் கடந்த 27 ம் தேதி காலை பணம் போடச் சென்றேன். அங்கிருந்து என்னை இருவர் வலுக்கட்டாயமாக்க ஒரு ஆட்டோவில் ஏற்றினார்கள். ஒருவர் என்னைக் கத்தியைக் காட்டி மிரட்டினார். மற்றொருவர் ஏன் உங்கள் வயதுக்கு ஏற்ற வேலையைச் செய்யாமல், சம்பந்தமில்லாத வேலையைச் செய்கிறீர்கள் என்று கேட்டார். அதன்பிறகு நான் மயக்கமடைந்துவிட்டேன். நான் எழுந்து பார்த்தபோது என்னுடைய  தொலைபேசி பறிக்கப்பட்டிருந்தது. எனக்கு ஒரு சாதாரண கைபேசி கொடுத்து இருந்தனர். அதில் பேசியவர், எனக்கு உயிர் மீது ஆசை இருந்தால், இந்த நகரத்தை விட்டே போகச் சொன்னார். விஜயாவாடாக்குச் சென்று, அதன் பிறகு சென்னைக்குப் போகமாறு கூறினார். அவர்கள் சொல்லியபடி நான் அங்கிருந்து கிளம்பிச் சென்னைக்கு வந்தேன். அங்கிருந்து யோசித்தபோதுதான் இனியும் மிரட்டுபவர்களுக்கு அடிபணியக் கூடாது என்று  முடிவெடுத்தேன். அங்கிருந்து தப்பி திருப்பதிக்கு வந்தடைந்தேன். பிறகு ஹைதராபாத்துக்கு வந்து, என் தோழிகளை தொடர்பு கொண்டேன். என்னுடைய வழக்கறிஞரின் உதவியால், பன்ஜாரா ஹில்ஸ் காவல் நிலையத்துக்குச் சென்றேன்.”என்று கூறியுள்ளார்.

சந்திரமுகி, தெலங்கானா ஹிஜ்ரா ட்ரான்ஸ்ஜெண்டர் சமிதி என்ற அமைப்பை உருவாக்கி, தொடர்ந்து மாற்றுப் பாலினத்தவர் உரிமைகளுக்காகப் போராடி வருபவர். இந்தச் சமூகச் செயற்பாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவே, அவர் தேர்தலில் போட்டியிடுவதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ``நான் மாற்றுப் பாலினத்தவரின் நலன்களுடன், ஒடுக்கப்பட்ட எல்லா மக்களின் நலனுக்காகவும் உழைக்க விரும்புகிறேன். வீடு இல்லாமல் வாழும் ஏழைகளுக்காகவும், தினம்  தினம்  குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்களின் முன்னேற்றத்துக்காகவும் உழைப்பேன். என்னுடைய மக்களுக்குச் சுத்தமான தண்ணீர், நல்ல கழிப்பறை வசதிகள், வீட்டு வசதிகள் செய்து தருவேன் என்று உறுதியளிக்கிறேன்.” என்று வாக்களித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்