பாதுகாப்புப் படைவீரர்களை திசை திருப்ப நக்சல்களின் அடடே ஐடியா! | Chhattisgarh Naxals Use Effigies to To Confuse Security Forces

வெளியிடப்பட்ட நேரம்: 09:43 (01/12/2018)

கடைசி தொடர்பு:09:43 (01/12/2018)

பாதுகாப்புப் படைவீரர்களை திசை திருப்ப நக்சல்களின் அடடே ஐடியா!

பாதுகாப்புப் படைவீரர்களை திசை திருப்ப நக்சல்கள் மேற்கொண்ட செயலை முன்னதாகவே கண்டறிந்து முறியடித்துள்ளனர். 

நக்சல்

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடப்பதற்கு முன்பு அங்கு தேர்தல் நிலவரம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமராமேன் உட்பட இரண்டு காவலர்கள் நக்சல்களின் தாக்குதலால் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலின்போதும் நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தொடர் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். எனினும் பல்வேறு இடங்களில் நக்சல்கள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள நக்சல்கள், பாதுகாப்புப் படைவீரர்களின் தேடுதலில் இருந்து தப்பவும் அவர்களைத் திசை திருப்பவும் வித்தியாசமான முயற்சிகளைக் கையாண்டு பாதுகாப்பு வீரர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளனர். நேற்று அந்த மாவட்டத்தில் பாதுகாப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வைக்கோல்களால் நிரப்பப்பட்ட கொடும்பாவி பொம்மைகளை கையில் துப்பாக்கியுடன் சேர்த்துப் பல இடங்களில் மரத்தில் கட்டிவைத்திருந்துள்ளனர். மேலும், அதே பகுதியில் 7 கிலோ எடையுள்ள வெடிபொருளையும் பாதுகாப்பு வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த வெடிபொருள் இரண்டு மீட்டர் தூரத்தில் வேறொரு மின் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்ததையும் கண்டறிந்து முறியடித்துள்ளனர். 

``நாங்கள் நக்சல்களை தேடிச் சென்றபோது சுக்மா மாவட்டத்தில் மரத்தால் ஆன போலி துப்பாக்கிகளுடன் கூடிய மூன்று கொடும்பாவி பொம்மைகளைக் கண்டறிந்தோம் முதலில் அவை அனைத்தையும் கண்டு நக்சல் என்றே நினைத்தோம். பிறகுதான் அது கொடும்பாவிகள் எனத் தெரிந்தது. நக்சல்கள் எங்களைத் திசைதிருப்பவே இப்படிச் செய்திருந்தனர். நாங்கள் கொடும்பாவிகள் மீது தாக்குதல் நடத்தினால் அதை உணர்ந்து நக்சல்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களின் திட்டம் எங்கள் படையால் முறியடிக்கப்பட்டு விட்டது” என சி.ஆர்.பி.எஃப் வீரர் தர்மேந்திரசிங் தெரிவித்துள்ளார்.