வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (01/12/2018)

கடைசி தொடர்பு:11:22 (01/12/2018)

``ராகுல்காந்திதான் என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்' - சித்து புதிய விளக்கம்!

ராகுல்காந்தி தான் என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பினார் எனப் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

சித்து

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய புனிதத் தலத்துக்கும், இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் புனிதத் தலத்துக்கும் இடையேயான புதிய வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா  சமீபத்தில் நடைபெற்றது. இரு நாடுகள் சார்பாக அமைக்கப்படும் வழித்தடம் என்பதால் இருநாடுகள் சார்பிலும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன், இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்கள், ஹர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளிட்டோருடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சருமான  நவ்ஜோத் சிங் சித்துவும் கலந்துகொண்டார். இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாகச் சித்து பாகிஸ்தான் சென்றிருந்தார். 

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சர்ச்சைக்குக் காரணம், பஞ்சாப் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்த பின்பும், சித்து அங்கு சென்றார் என்பதுதான். பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து சித்துவை விமர்சித்துப் பேசி வருகின்றன. இதற்கிடையே, நேற்று தேர்தல் பிரசாரத்துக்காக ஐதராபாத் வந்திருந்த சித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் சென்றது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் எனக்கு கேப்டன். அவர்தான் என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார். அவரைப்போலவே, குறைந்தபட்சம் 20 காங்கிரஸ் தலைவர்கள் என்னை பாகிஸ்தான் போகச் சொல்லி அனுப்பிவைத்தனர். பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் என் தந்தை போன்றவர். அவர் என்னிடம் பாகிஸ்தான் செல்வது குறித்து கேட்டார். ஆனால் ``ஏற்கெனவே பாகிஸ்தான் செல்வதாக நான் வாக்குறுதி அளித்துவிட்டதாகக் கூறினேன். அதனால் செல்கிறேன்" என்று கூறிவிட்டே சென்றேன்" என விளக்கமளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க