வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (01/12/2018)

கடைசி தொடர்பு:11:42 (01/12/2018)

ஏமாற்றம்... மோடி அரசு விவசாயிகளுக்கு அளித்த ஒரே பரிசு இதுதானா? #DilliChalo

ஒரு விவசாயிக்கு இந்த அரசின் மீது வெறுப்பு வருவதற்கு காரணங்கள் அதிகமாக இருக்கின்றன.

ஏமாற்றம்... மோடி அரசு விவசாயிகளுக்கு அளித்த ஒரே பரிசு இதுதானா? #DilliChalo

டந்த ஒன்றரை வருடத்தில் விவசாயிகள் நடத்தும் நான்காவது தேசிய போராட்டம் இது. இந்நேரத்தில் ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பெரும்பாலான விவசாயிகள் சேர்ந்து அதிக அளவிலான தேசிய அளவிலான போராட்டத்தை நடத்தியது, பிரதமர் மோடி அவர்களின் ஆட்சிக்காலத்தில்தானா? இந்தக் கேள்விக்கான பதிலைவிட முக்கியமானது, இந்தக் கேள்வி ஏன் எழுப்பப்படுகிறது என்பது.

கடந்த வாரம் `ஸ்வராஜ் இந்தியா' அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், `மோடி ராஜ் மி கிஸான்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் மோடி அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இரட்டை லாபத்தைக் கொடுத்திருக்கிறதா அல்லது இரட்டை ஆபத்தைக் கொடுத்திருக்கிறதா என்று அலசியிருக்கிறார். மோடி அரசுதான் குடியரசு வரலாற்றில் விவசாயிகளுக்கு மோசமான ஆட்சியைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார், யோகேந்திர யாதவ். 2014-ன் ஆண்டு மோடி கொடுத்த வாக்குறுதிப் பட்டியலைப் பார்க்கும்போது சோகம்தான் ஏற்படுகிறது. முந்தைய அரசாங்கங்களை விடக் கொஞ்சம் இயற்கை விவசாயத்துக்கு உதவியிருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு உதவுவதில் அக்கறை செலுத்தவில்லை. வாக்குறுதிகளில் இன்று நினைத்துப் பார்க்கும்படியான திட்டம் எதுவும் இல்லை. 

மோடி அரசும், விவசாயிகளின் போராட்டங்களும்

மோடியின் தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி ஒன்று இருந்தது. அதுதான் விவசாயிகளிடையே பி.ஜே.பி-யின் புகழைப் பரப்ப உதவியது. `உற்பத்தி செலவில் விவசாயிகளுக்குச் 50 சதவிகிதம் லாபம் கிடைக்கும்' என்பதுதான் அந்த வாக்குறுதி. ஆனால், தேர்தலில் ஜெயித்த பின்னர் உச்சநீதிமன்றத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என வாக்குமூலம் அளித்தது. இறுதியாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி 'உற்பத்தி செலவு' என்ற வார்த்தையை வரையறுத்து, மோடி அரசு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையைக் கொடுத்ததாக அறிவித்தார். உண்மையில் குறைந்தபட்ச கொள்முதல் ஆதரவு விலையானது, 20 முதல் 40 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தது. அதனால்தான் விவசாய இயக்கங்கள் மோடி கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இது நிச்சயமாக ஆளும் அரசுக்கு நல்லதல்ல.

விவசாய தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, மோடி அரசாங்கம் தனது வாசகங்களால் அரசாங்கத்தை நியாயப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், மிகைப்படுத்துதலுக்கும், உண்மைக்கும் உள்ள இடைவெளியை அந்த அரசு மறந்துவிடுகிறது. சில முக்கியமான திட்டங்களில் அரசின் செயல்பாடுகள் அலட்சியமாகவே இருக்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு முறையான உதவிகள் கிடைக்காமலே போகிறது. பிரதான் மந்திரி அன்னததத்தா ஆய் சன்ரக்‌ஷன் அபியன் திட்டமானது (PM Aasha) சரியான விலையை விவசாயிகளுக்கு வழங்கத் தவறிவிட்டது. அத்திட்டம், விவசாய உற்பத்தி பொருள்களை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசு கொள்முதல் செய்வதுதான். ஆனால், அது விவசாயிகளுக்கு முழுமையாகச் சென்று சேரவில்லை. நீர்ப்பாசன திட்டங்களில் நிறைவு விகிதம் சுமார் 10 சதவிகிதமாகத்தான் இருக்கிறது. இது மிகவும் குறைந்த அளவாகும். பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டமும் 10 சதவிகித பயனாளிகளை மட்டுமே சேர்த்து பயிர்க்கடன் வழங்கி இருக்கிறது. தேசிய வேளாண்மைச் சந்தை திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதுபோல பல திட்டங்கள் மிகைப்படுத்தப்பட்டுக் காட்டப்படுகின்றன. ஆனால், உண்மையான தகவலுக்கும், அரசுத் தரப்பில் சொல்லும் தகவல்களுக்கும் இடைவெளி அதிகமாகவே இருக்கிறது. 

மேற்கண்ட தகவல் அனைத்தும் முக்கியமானவைதான். ஆனால், இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு விவசாயிகள் விரோத அரசு என்று குற்றம்சாட்டிவிட முடியாது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசுகளை வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு விரோதமானது என்பதற்குக் காரணம், விவசாயிகளுக்கு அவசரத் தேவையின்போது அலட்சியமாக இருந்ததுதான். இதுதான் விவசாயிகளுக்கு அரசின்மீது அதிகமான கோபத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது.

விவசாயிகள் போராட்டம்

மோடி அரசின் ஆட்சிக் காலத்தில், விவசாயிகள் மூன்று பேரழிவுகளைச் சந்தித்தனர். முதல் இரண்டு ஆண்டுகளில் விவசாயிகள் வறட்சியால் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். 1960 மற்றும் 2009-10-ம் ஆண்டுகளில் வறட்சியைப் போக்க எடுத்த வழிமுறைகளைக் கூட மோடி அரசாங்கம் கையாளவில்லை. பயிர்களுக்கான விலை குறைந்துவிட்டதால் சர்வதேச சந்தையில் விலை குறைந்து இரண்டாவது பேரழிவு ஏற்பட்டது. அதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது மோடி அரசு. இதன் உச்சம் அப்போதும் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததுதான். மூன்றாவது பேரழிவு, பண மதிப்பிழப்பு, அதன் தாக்கத்தை இன்னும் விவசாயிகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், ஆதிவாசி விவசாயிகளின் வன உரிமைகளைக் கவனிக்காதது, மாடுகளின் பெயரில் தாக்குதல் நடைபெற்றதால் மாடுகளின் பொருளாதாரம் பலமான அடி வாங்கியது எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

இப்படியாக ஒரு விவசாயிக்கு இந்த அரசின் மீது வெறுப்பு வருவதற்குக் காரணங்கள் அதிகமாக இருக்கின்றன. அரசின் கொள்கையும் திட்டமும், விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடைவெளியை ஏற்படுத்தக் கூடாது. அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கு ஓரளவாவது பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும். அது இல்லாமல் போனால், அரசியல் ரீதியாக ஆளும் கட்சிக்கு அது பெரிய பின்னடைவுதான். இப்போது கூட நேற்றும், இன்றும் (நவ.29, 30) விவசாயிகள் டெல்லியில் போராடுவது, பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் விவசாய விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய ஆணையத்தின் பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை அகில இந்திய கிஷான் சங்கம் ஒருங்கிணைக்கிறது. நேற்றும், இன்றும் நடந்த போராட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 207 சங்கங்களைச் சேர்ந்த பல லட்சம் விவசாயிகள் திரண்டு வந்து டெல்லியை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர். நேற்று காலை, டெல்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய விவசாயிகள், அங்கேயே ரயில் மறியல் செய்தனர். பின்னர், போலீஸாரால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ரயில்வே ஸ்டேஷன் முதல் ராம்லீலா மைதானம் வரை அரைநிர்வாணமாக, மண்டைஓடு, எலும்புகளுடன் ஊர்வலமாகச் சென்றனர். இரண்டாம் நாளான இன்று ராம்லீலா மைதானத்தில் இருந்து மஹாராஜா ரஞ்சித் சிங் சாலை, ஜந்தர் மந்தர் டால்ஸ்டாய் சாலை வழியாக நாடாளுமன்றத்தை நோக்கி விவவசாயிகள் பேரணி சென்றனர். இப்போராட்டத்துக்கு மத்திய அரசின் தரப்பில் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை. இப்போராட்டத்துக்கு ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

வழக்கம்போல மோடி அமைதி காத்துக்கொண்டுதான் இருக்கிறார். இரண்டு நாள் போராட்டம்தானே முடிந்துவிடும் என்று நினைத்து ஆளும் அரசு மவுனம் காக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த விவசாய சங்கங்களும் ஒன்றுகூடி நடத்திய போராட்டம் இது. கிட்டத்தட்ட லட்சக்கணக்கான விவசாயிகள் 29 மாநிலங்களில் இருந்தும் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் கோபத்துக்கு நிச்சயமாக ஒரு நாள் ஆளும் அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்