வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:11:30 (01/12/2018)

உடலுறுப்புகளுடன் பறக்கவிருக்கும் ட்ரோன்கள்! - விரைவில் இந்தியாவில் அறிமுகம்

உடலுறுப்புகளைக் கொண்டு செல்ல விரைவில் ட்ரோன் பயன்படுத்தப்படும் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா  தெரிவித்துள்ளார். 

ட்ரோன்

கடக்க முடியாத தூரத்தை மிக விரைவில் கடந்து, பலரது உயிரைக் காப்பாற்றிய பல ஆம்புலன்ஸ் டிரைவர்களின் கதையை நாம் கேட்டிருப்போம். அதேபோல சிலரது உயிரைக் காப்பாற்ற உடலுறுப்புகள் ஆம்புலன்ஸில் பறந்த கதையும் உண்டு. இதற்கு மாறாக ஹெலி ஆம்புலன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டு அதில் நோயாளிகளை ஏற்றிச் சென்று உயிர் காப்பாற்றிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்தியாவில் ஹெலி ஆம்புலன்ஸ் செல்வந்தவர்கள் பயன்படுத்துவதற்கே அதிகம் பயன்படுகிறது. சாதாரண மக்கள் அனைவரும் சாலையில் பாய்ந்து செல்லும் ஆம்புலன்ஸை நம்பியே உள்ளனர். 

இவை அனைத்துக்கும் தீர்வாக இந்தியாவில் உடல் உறுப்புகளைக் கொண்டு செல்ல, அவசர மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செல்ல விரைவில் ட்ரோன் பயன்படுத்தப்படும். அதற்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளதாகவும் அதற்காக விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் நடைபெற்றுவருவதாகவும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

``சில நிறுவனங்களுக்கு ட்ரோன் இயக்குவதற்கான உரிமம் டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ட்ரோன் சேவை தொடங்கப்படவுள்ளது. இதற்கு பல்வேறு மருத்துவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ட்ரோன்கள் மூலம் உடலுறுப்புகள் கொண்டு செல்வதினால் அதிகளவில் நோயாளிகள் பயனடைவார்கள். மேலும், பல மருத்துவமனைகளில் ட்ரோன் தரையிறங்குவதற்கு ஏதுவான தளங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது ” என சின்ஹா தெரிவித்துள்ளார்.