வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (01/12/2018)

கடைசி தொடர்பு:13:02 (01/12/2018)

பில்கேட்ஸை அழவைத்த இந்தியப் பெண்! - புத்தகத்தால் வெளியான உண்மை

உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் ஒருமுறை இந்தியா வந்தபோது இங்குள்ள ஒரு பெண்ணின் வாழ்க்கை கதையைக் கேட்டு அழுதுள்ளார்.

பில்கேட்ஸ்

எய்ஸ்ட், ஹெச்.ஐ.வி நோய்களைத் தடுக்கும் நோக்கில் பில்கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலிண்டா ஆகியோர் இணைந்து   ‘அவஹான் (Avahan)’ என்ற அறக்கட்டளையை இந்தியாவில் தொடங்கி நடத்திவருகின்றனர்.  இந்த அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி அஷோக் அலெக்ஸாண்டர் என்பவர்  ‘ஒரு அந்நியரின் உண்மை’ (A Stranger Truth) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் காதல், தலைமைப் பண்பு மற்றும் இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் தைரியம் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண்களின் உண்மைக் கதையையும் சுட்டிக்காட்டியிருந்தார். அதன் மூலம் அதேபோன்று பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ஒரு தன்னம்பிக்கை தரமுடியும் என்ற நோக்கில் இதைப் பதிவிட்டுள்ளார். 

ஒரு உண்மையான நிகழ்வு பற்றி தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அலெக்ஸாண்டர், `` பில்கேட்ஸும் அவரின் மனைவி மெலிண்டாவும்  ‘அவஹான்’ அறக்கட்டளை சார்பாக  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கடந்த 2000-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தனர். பாலியல் தொழிலால் பாதிக்கப்பட்ட பல பெண்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தனர். அவர்களிடம், மெலிண்டா தங்களுக்கு நடந்தவற்றைக் கூறுமாறு கேட்டார். ஒவ்வொரு பெண்ணின் கதையும் மிகவும் வலி நிறைந்ததாகவும், சோகமாகவும் இருந்தது. அவர்களின் வாழ்வில் நிராகரிப்புகளும், வறுமையும் அதிகம் நிறைந்து காணப்பட்டன.

அதில் ஒரு பெண் தனக்கு நடந்த மிக சோகமான சம்பவத்தைக் கூறினார். அவருக்கு உயர்நிலை கல்வி படிக்கும் ஒரு மகள் இருந்துள்ளார். ஒருநாள் அந்த மாணவியின் நண்பர்களுக்கு அவரின் தாய் என்ன தொழில் செய்கிறார் எனத் தெரியவருகிறது. இதைத் தெரிந்துகொண்ட சக மாணவிகள் இந்தச் சிறுமியை கேலி செய்து துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்தச் சிறுமி மிகுந்த மனஉளைச்சல் அடைந்துள்ளார். ஒரு நாள் சிறுமியின் தாய் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும்போது, அந்தச் சிறுமி தன் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குமாட்டிக் கொண்டுள்ளார். அவருக்கு அருகில்  ‘இனி என்னால் வாழ முடியாது’ என்றும் எழுதிவைத்துள்ளார். அந்தப் பெண் இதைக் கூறி முடிக்கும்போது நான் கேட்ஸை பார்த்தேன். அவரது தலை தொங்கியபடி கீழே பார்த்து அழுது கொண்டிருந்தார்” என அந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.  உலக எய்ட்ஸ் தினமான இன்று தான் எழுதிய புத்தகத்தில் உள்ள சிறு பகுதிகள் பற்றி பகிர்ந்துள்ளார் அலெக்ஸாண்டர்.