கேலி, கிண்டலால் நின்றுபோன படிப்பு! - 21 ஆண்டுகளுக்குப் பிறகு கனவுகளை மீட்டெடுத்த திருநங்கை #HatsOff | After 21 years, transgender writes SSLC examination

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (01/12/2018)

கடைசி தொடர்பு:15:35 (01/12/2018)

கேலி, கிண்டலால் நின்றுபோன படிப்பு! - 21 ஆண்டுகளுக்குப் பிறகு கனவுகளை மீட்டெடுத்த திருநங்கை #HatsOff

கேரளாவில் திருநங்கை ஒருவர் 21 ஆண்டுகளுக்குப் பிறகு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

திருநங்கை ஜோஷ்னா

கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் திருநங்கை ஜோஷ்னா. கேரளாவில் நடத்தப்பட்டு வரும் சமன்வாயா திட்டத்தின் கீழ் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு திருநங்கை ஜோஷ்னா 10-ம் வகுப்புக்கு இணையான பொதுத்தேர்வை எழுதியுள்ளார். சிறுவயதில் படிக்காமல் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, 10-ம் வகுப்புத் தேர்வு ஏன் எழுதுகிறேன் என்கிற காரணத்தை விளக்கும் ஜோஷ்னா வார்த்தைகளில் அத்தனை சோகம்.

எல்லோரையும் போலவே, சிறுவயதில் பள்ளிப் படிப்பில் சுட்டியாகவே இருந்துள்ளார் ஜோஷ்னா. படிப்பைத் தவிர, டான்ஸ், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் சிறுவயதில் ஆர்வத்துடன் பங்கெடுத்துள்ளார். ஆனால், உடல்ரீதியாகத் திருநங்கைகளைப் போன்று இருந்ததால் சமூகத்தால் கேலிக்கு உள்ளாகியுள்ளார். சிறுவயது என்றுகூட பாராமல் பலர் தவறாக நடக்க முயன்றுள்ளனர். வெளியில்தான் இப்படி என்றால், பள்ளியிலும் அவருக்கு நேர்ந்தது இதே கொடுமைதான். தொடர் கேலி, கிண்டல், அவமதிப்புகளால் வேறு பள்ளிக்கு செல்லும் சூழ்நிலை. 8-ம் வகுப்பு படிக்கும்போது வேறுபள்ளியில் இணைந்துள்ளார். புதிய பள்ளியிலும் இதே துயரத்தைச் சந்தித்துள்ளார். விளைவு சமூகத்தின் தொடர் கேலி, கிண்டல்களால் 8-ம் வகுப்புக்கு மேல் செல்லாமல் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். கிட்டத்தட்ட வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதி சிறுவயதில் கடும் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பித்தவர், வாழ்க்கையைத் தைரியமாக எதிர்கொள்ளத் தொடங்கினார்.

வாழ்வின் முதல்படியாக அனிமேஷன் படிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பியூட்டிஷியன் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். இந்தப் படிப்பில் வெற்றிபெற்றவர், அதைத் தொழிலாகச் செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கல்யாண பெண்களுக்கு மேக் - அப் செய்துவந்தார். பின்னர், அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேறினார். சினிமா நடிகர்கள், நடிகைகளுக்கு பியூட்டிஷியனாக மாறும் அளவுக்குத் தன்னை மெருகேற்றினார். உழைப்பின் மீது நம்பிக்கை வைத்த அவருக்கு அவர் எதிர்பார்த்தது போலவே நடந்தது. சினிமா வாய்ப்பு வந்தது. 

மலையாளத்தில் கடந்த வருடம் ஜெயசூர்யா நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிகண்ட படம் `ஞான் மேரிக்குட்டி.' இந்தப் படத்தில் ஜெயசூர்யா கதாபாத்திரத்துக்கு மேக் அப் வுமனாகப் பணியாற்றினார். தொடர்ந்து சில படங்களில் வேலை பார்ப்பதற்காகவும் கமிட் ஆகியுள்ளார். இந்தச் சாதனைகளை செய்த பிறகும் அவர் மனதில் திருப்தி ஏற்படவில்லை. பள்ளிப் படிப்பை முடிக்காததை ஒரு குறையாகவே எண்ணிக்கொண்டிருந்த ஜோஷ்னா கேரளாவில் நடத்தப்பட்டு வரும் சமன்வாயா திட்டத்தை அறிந்து அதில் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு, சமன்வாயா திட்டத்தின் மூலம் மீண்டும் பள்ளிப் படிப்பை தொடர்ந்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் வகுப்புகளில் தவறாமல் பங்கேற்று தற்போது 10-ம் வகுப்புக்கு இணையான தேர்வை எழுதியுள்ளார். ``தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். நான் பாஸ் ஆவேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது" எனக் கூறும் ஜோஷ்னாவின் அடுத்த கனவாக இருப்பது 12-ம் வகுப்பு படிக்க வேண்டும் என்பது.

credits: mathrubhumi

நீங்க எப்படி பீல் பண்றீங்க