வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (01/12/2018)

கடைசி தொடர்பு:18:05 (01/12/2018)

'அகஸ்தியர் கூடத்துக்கு பெண்கள் செல்லலாம்; தடுக்கக் கூடாது!" - கேரள உயர் நீதிமன்றம்

'அகஸ்தியர் கூடத்துக்கு பெண்கள் செல்லலாம்; தடுக்கக் கூடாது!

கேரளா

கேரளாவிலுள்ள அகஸ்தியர்கூடம் மலைக்குச் செல்ல, பெண்கள் மற்றும்  14 வயதுக்குக்  கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி அளித்த மனுவை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், பெண்கள்  அந்த மலைக்குச்  செல்வதை யாரும் தடுக்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது .

அகஸ்தியர்மலை

திருவனந்தபுரத்தில், நேயர் வனவிலங்கு சரணாலயம் அருகே இருக்கிறது அகஸ்தியர்கூடம். இந்த மலையின் அடிவாரத்திலிருக்கும் அதிருமலை  வரை மட்டுமே பெண்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் . ஒவ்வோர் ஆண்டும் ஒரு மாதத்துக்கு  இந்த மலையில் மக்கள் ட்ரெக்கிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தங்களின்  கலாசாரத்தைக்  காரணம் காட்டி, அங்குள்ள பழங்குடி மக்கள் பெண்களை இங்கே அனுமதிக்கவில்லை. என்றாலும், இது தொடர்பான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் அளிக்கப்படவில்லை .

இந்த முடிவை எதிர்த்து, 'விமன் இன்டக்ரேஷன் மற்றும் குரோத்  த்ரூ ஸ்போர்ட்ஸ் (Women Integration and Growth through Sports)'  என்ற அமைப்பு,  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனு சிவராமன், பெண்களுக்கு அனுமதி வழங்கியும், மலை ஏற மாநில அரசு வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தியும் தீர்ப்பு வழங்கினார்.

அகஸ்தியர்மலை

இந்த மலைக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கக்கோரி,   2017-ம் ஆண்டு முதன்முறையாக 'பென்னொருமா (Pennoruma)' என்ற அமைப்பு , 51 பெண்களுடன் மலை ஏற முயன்றது. ஆனால், இது தங்களின் பாரம்பர்யப் பழக்கவழக்கத்துக்கு எதிரானது என்று அங்குள்ள ஆதிவாசி மஹாசபா, நீதிமன்றத்தை அணுகியது. இது தொடர்பான தீர்ப்பு, வரும் வெள்ளிக்கிழமை  வழங்கப்பட உள்ளது.

சபரிமலை விவகாரத்தில், கேரள அரசு பெரும் போராட்டங்களைச்  சந்தித்து வரும் நிலையில், அதேபோன்றதொரு வழக்கில்   பெண்களுக்கு சாதகமாகத்  தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க