வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:04:30 (02/12/2018)

`குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக வருகிறார் தென் ஆப்பிரிக்க அதிபர்' -பிரதமர் மோடி

69-வது இந்தியக் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வருகையின்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையே சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

குடியரசு தினவிழா

ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக சனிக்கிழமை தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராம்போசாவைச் சந்தித்த பிரதமர் மோடி இந்தியக் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்ற தென் ஆப்பிரிக்க அதிபர் ராம்போசா இந்தியக் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதைத் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து பதிவிட்டுள்ளார். இந்தியாவில் காந்தி 150 ஆண்டுகள் மற்றும் நெல்சன் மண்டேலா 100 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் தென் ஆப்பிரிக்க அதிபரின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ட்விட்டர் பதிவு

கடந்த ஆண்டு வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2019-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் இந்திய அரசின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். ஜூலை மாதத்தில் இந்த அழைப்பு கிடைத்ததை உறுதி செய்த அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா குக்கபே சாண்டர்ஸ் இந்த அழைப்பு தொடர்பாக விரைவில் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க அதிபருக்கு இந்தியக் குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள நேரம் இல்லை என்று கூறி இந்திய அரசு விடுத்திருந்த அழைப்பை நிராகரித்திருந்தது. இந்த முடிவை தேசிய பாதுகாப்பு ஆணையர் அஜித் தோவலிடம் கடிதம் மூலம் அமெரிக்க அரசு முறைப்படி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியக் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டின் தலைவரை அழைக்கிறது இந்தியா. அதன்படி இதற்குமுன் 2016-ல் பிரெஞ்ச் அதிபர் ஃப்ரான்சிஸ் ஹோலண்டேவும் 2015-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் இந்தியக் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.