வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (02/12/2018)

கடைசி தொடர்பு:11:23 (02/12/2018)

‘இந்தியா வந்தால் என்னை அடித்தே கொன்றுவிடுவார்கள்’- நிரவ் மோடி கதறல்

தான் இந்தியா வந்தால் தன்னை அடித்தே கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் இங்கு வரத் தயக்கமாக இருப்பதாக நிரவ் மோடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

நிரவ் மோடி

மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அவர் மீதும், அவரின் குடும்பத்தினர் மீதும் சி.பி.ஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகிறது. இது பலரின் கவனத்துக்கு வரும் முன்னரே அவரும், குடும்பத்தினரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். அவர்களைக் கண்டறிந்து மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் 

 மும்பையில் உள்ள சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நிரவ் மோடியை நேரில் ஆஜராகும் படி கடிதம், இ-மெயில் மூலம் தெரிவித்தும் அவர் ஆஜராகவில்லை’எனத் தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து வாதாடிய நிரவ் மோடி தரப்பு வழக்கறிஞர், நிரவ் மோடி அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில், “சட்டவிரோதமாகப் பண பரிவர்த்தனை செய்ததாக என் மீது கூறப்படும் புகாருக்கு அமலாக்கத் துறையினரிடம் தகுந்த ஆதாரங்கள் இல்லை. என்னை நேரில் ஆஜராகுமாறு வந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் சூழ்நிலையில் மட்டுமே நான் உள்ளேன். என்னைப் பற்றி இந்தியாவில் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது. நான் இந்தியா வந்தால் என்னை அடித்துக் கொல்லும் சூழல் உருவாகலாம். தற்போதே என் உருவபொம்மைகளை எரித்து வருகின்றனர். இந்தியாவில் எனக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் அங்கு வரத் தயக்கமாக உள்ளது” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.