வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (02/12/2018)

கடைசி தொடர்பு:12:52 (02/12/2018)

`இது மட்டும் தான் வருத்தம்; மற்றபடி எல்லாம் ஓகே தான்' - விடைபெற்றார் ஓ.பி.ராவத்!

ஓ.பி ராவத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாகப் பதவியேற்றார் சுனில் அரோரா. 

இந்திய தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்த ஓ.பி ராவத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சுனில் அரோரா இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தால் புதிய தலைமைத்தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு இன்று பதவியேற்றார். சுனில் அரோரா முதன்முதலாக வரும் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவுள்ளார். அதனைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், ஒடிஷா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய தேர்தலையும் நடத்தவுள்ளார். 

62 வயதாகும் சுனில் அரோரா இதற்கு முன்னதாக தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராகவும் திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்திலும் பணியாற்றியுள்ளார். 

ஓ பி ராவத்

இதற்கிடையே,  தன் கடைசி பணி நாளான நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பி ராவத், “ கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேர்தல் தொடர்பாகப் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டன. அதில் கட்சிகளின் தேர்தல் செலவுக்கு உச்ச வரம்பு வேண்டும் மற்றும் கட்சிகள் நிதி திரட்டுவதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற கருத்தையே அனைத்துக் கட்சிகளும் முன் வைத்தன. இது எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும். 

சமூக ஊடகங்களும் பண பலமும்தான் தேர்தலில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றை ஆராய்ந்து சரி செய்ய ஒரு புதிய குழுவை அமைத்தோம். ஆனால் பணி சுமை காரணமாக அந்தக் குழுவின் பணிகளைச் சரிவர கவனிக்க முடியாமல் போனது. எனது பணி காலத்தில் இது மட்டுமே எனக்கு வருத்தமளிக்கிறது” என ராவத் பேசியுள்ளார்.