வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (02/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (02/12/2018)

`தீபக் மிஸ்ரா தலைமையில் உச்ச நீதிமன்றம் சரியான பாதையில் செல்லவில்லை!’ - நீதிபதி குரியன் ஜோசப்

முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் உச்ச நீதிமன்றம் சரியான பாதையில் செல்லவில்லை என சமீபத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

குரியன் ஜோசப்

இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாகக் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், `உச்ச நீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதேநிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்க வாய்ப்பில்லை. நிர்வாகம் சரியில்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்’ என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

இந்த 4 பேரில் ஒருவர் நீதிபதி குரியன் ஜோசப். இவர் கடந்த நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து நேற்று ஏ.என்.ஐ ஊடகத்துக்குப் பேட்டியளித்த இவர், ``உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்தபோது நீதிமன்றம் சரியான பாதையில் செல்லவில்லை. அனைத்திலும் முரண்பாடுகள் இருந்தது. இதை நாங்கள் நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் கூறினோம். ஆனால், அவர் இதற்கு எந்தப் பதிலும் விளக்கமும் அளிக்கவில்லை. அதன் பிறகுதான் நாங்கள் செய்தியாளர்களை சந்தித்து இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தோம். 

ஊடகங்கள் எப்போதும் எங்களைக் கண்காணிக்கிறது என்பது எனது நிலைப்பாடு. நாங்கள் சிறந்ததை செய்துள்ளோம் என்பதை வெளியில் கொண்டு வந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த நினைத்தே அவ்வாறு செய்தோம்’’ எனப் பேசியுள்ளார்.