`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குழந்தைத் திருமணங்களை அனுமதிப்போம்!’ - பா.ஜ.க வேட்பாளர் சர்ச்சைப் பேச்சு | will allow child marriages, if voted power, says Rajasthan BJP candidate

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:20:30 (02/12/2018)

`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குழந்தைத் திருமணங்களை அனுமதிப்போம்!’ - பா.ஜ.க வேட்பாளர் சர்ச்சைப் பேச்சு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குழந்தைத் திருமணங்களில் போலீஸாரின் தலையீடு இருக்காது என்று ராஜஸ்தான் பா.ஜ.க வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி கொடுத்திருப்பது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

ராஜஸ்தான் பா.ஜ.க வேட்பாளர் ஷோபா

Photo: Facebook.com/Shobhachauhan.pradhan/

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதவாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், நாடு முழுவதும் 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் இந்த மாதத்தில் நடைபெறுகிறது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அரசியல்வாதிகள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் அவர்களில் சிலர் கொடுக்கும் வாக்குறுதிகள் சர்ச்சைக்கு வித்திடுகின்றன. 

அந்தவகையில் ராஜஸ்தானின் பா.ஜ.க பெண் வேட்பாளர் ஒருவர் கொடுத்த வாக்குறுதி சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்கிறது. சோஜாத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஷோபா சௌகான், அப்படி ஒரு சர்ச்சைக்குரிய வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். 

சோஜாத் தொகுதிக்குட்பட்ட பிபாளியா காலா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேவாசி இன மக்களிடையே பேசிய ஷோபா,``எங்களிடம் சட்டமும் அதிகாரம் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குழந்தைத் திருமணங்களில் போலீஸ் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம்’’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தில் உள்ள குழந்தைத் திருமணத்தைத் தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில், பா.ஜ.க வேட்பாளர் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.