வெளியிடப்பட்ட நேரம்: 04:16 (03/12/2018)

கடைசி தொடர்பு:08:16 (03/12/2018)

'இதுதான் விவசாயிகளின் நிலைமை' - வெங்காய வருமானத்தை பிரதமர் நிதிக்கு அனுப்பிய விவசாயி!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர்,  விவசாயிகளின் நிலைமையை உணர்த்தும் விதமாக, தான் விளைவித்த வெங்காயத் தொகையை மணியார்டர் மூலம் பிரதமர் நிதிக்கு அனுப்பியுள்ளார். 

வெங்காயம்

 

கடந்த 2010-ம் ஆண்டு, அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள  சஞ்சய் சாதே எனும் விவசாயி, மத்திய வேளாண்மைத் துறையினரால் தேர்வுசெய்யப்பட்ட பெருமை கொண்டவர். 
தற்போது, இவரது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு அறுவடை செய்திருக்கிறார். மொத்தம் 750 கிலோ மகசூல் கிடைத்திருக்கிறது. அவற்றை நாசிக் மார்க்கெட்டுக்குக் கொண்டு சென்றிருக்கிறார். அவரது வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனையாகியிருக்கிறது. அதன்படி, ஒரு கிலோவுக்கு 1ரூபாய் 40 பைசா என விலைபேசி விற்பனை செய்திருக்கிறார்.

மொத்தம் 1,064 ரூபாய் கிடைத்திருக்கிறது. இது, அவருக்கு பெரும் மன உளைச்சலைத் தந்திருக்கிறது. இந்த நிலை அவருக்கு விரக்தியைக் கொடுக்கவே, உடனடியாக ஒரு முடிவெடுத்தார். கடந்த நான்கு மாதங்களாகப் பராமரித்தும் சரியான வருமானம் கிடைக்காமல் போனதை அதிகாரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்த, வித்தியாசமான முறையைக் கையாண்டிருக்கிறார்.
இதுதான் விவசாயிகளின் நிலைமை என வெங்காயம் விற்ற மொத்த பணத்தையும் மணியார்டர் மூலம் பிரதமர் நிதிக்கு அனுப்பிவிட்டார். அந்தப் பணத்துக்கு 54 ரூபாய் மணியார்டர் அனுப்பும் செலவும் கூடுதலாகச் செய்திருக்கிறார். இருந்தும், அதிகாரிகளிடமிருந்து எந்தவிதமான பதிலும் இவருக்கு அனுப்பப்படவில்லை.