வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (03/12/2018)

கடைசி தொடர்பு:11:20 (03/12/2018)

'உங்களுக்கு ஏன் சுயமரியாதை இல்லை?''- வடஇந்தியர்கள் கூட்டத்தில் ராஜ் தாக்கரே கேள்வி

மும்பையில்  சிவசேனா, நவநிர்மான் கட்சிகளுக்கும் வட இந்தியர்கள் என்றாலே ஆகாது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்மீது இந்த கட்சியினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது உண்டு. நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே  வட இந்தியர்களுக்கு எதிராகக் கருத்து சொல்லிவருபவர். இந்நிலையில், ராஜ் தாக்கரேவை மும்பையில் இயங்கிவரும் வட இந்தியர்கள் அமைப்பான உத்தர் பாரத் மகா பஞ்சாயத்து சபை  தங்கள் அமைப்பில் பேச அழைத்தது. அழைப்பை ஏற்ற ராஜ் தாக்கரே, நேற்று வட இந்தியர்களிடத்தில் உரையாற்றினார். 

ராஜ் தாக்கரே

அப்போது ராஜ் தாக்கரே , '' வட இந்தியர்கள் மும்பையில் மட்டுமில்லை தென்மாநிலங்களிலும்கூட அவமதிக்கப்படுகிறார்கள். நீங்கள் ஏன் உங்கள் மாநிலங்களில் வாழக்கூடாது. உங்கள் மாநிலங்களில் ஏன் உங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இதுகுறித்து உங்கள் அமைச்சர்களிடத்தில், தலைவர்களிடத்தில் என்றாவது கேள்வி எழுப்பியிருக்கிறீர்களா. ஏன் உங்களுக்கு சுயமரியாதை இல்லை?  சமீபத்தில், குஜராத்தில் பீகாரிகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள்மீது குஜராத் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமர்கள்தான் நாட்டை நீண்ட காலமாக ஆண்டுள்ளனர். தற்போதைய பிரதமர் மோடிகூட வாரணாசியில் இருந்து தேர்வுசெய்யப்பட்டவர்தான். இவர்களிடத்திலெல்லாம் நீங்கள் ஏன் கேள்வி எழுப்புவதில்லை. 

உங்கள் தலைவர்களிடத்தில் உங்கள் வாழ்வாதாரத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு நீங்கள் போராடுவதை விட்டுவிட்டு, மும்பைபோன்ற நகரங்களில் வந்து தஞ்சமடைகிறீர்கள். உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் , வங்கதேசத்தவர்கள் மும்பையில் லட்சக்கணக்கில் வசிக்கிறீர்கள்.  இதனால்,  மக்கள் பெருக்கத்தால் நகரம் தடுமாறுகிறது. மும்பைக்கு வட மாநிலங்களிலிருந்து தினமும் 48 ரயில்கள் வருகின்றன. திரும்பிச்செல்லும்போது காலியாகச் செல்கிறது. உங்கள் மாநிலங்களில் வேலை வாய்ப்பு குறைவு என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அதே வேளை, மகாராஷ்டிரா மக்களின் நிலையையும் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எங்கள் மக்களிலேயே பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்துவருகின்றனர்'' என்று பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க