குறைந்துபோன ஆதார் பயன்பாடு... காரணம் என்ன?  | Aadhaar usage, enrollments plunge in November after SC order 

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (03/12/2018)

கடைசி தொடர்பு:13:40 (03/12/2018)

குறைந்துபோன ஆதார் பயன்பாடு... காரணம் என்ன? 

தார் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, ஆதார் பயன்பாடு மற்றும் அதற்கான பதிவு எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆதார் பயன்பாடு

ஆதார் எண் அவசியமா இல்லையா என்பது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அதன் பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. அதன்படி,  தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம், நீட், சி.பி.எஸ்.இ தேர்வுகளுக்கு  கட்டாயமாக்கக் கூடாது, பள்ளி சேர்க்கைக்கு  கட்டாயம் இல்லை, வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் போன் இணைப்புக்கு ஆதார் எண் கட்டாயமில்லை  என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்தது. 

இதனால்,  புதிய பதிவுக்காக புதிதாக வருபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. மேலும், வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண் இணைப்புக்கு ஆதார் கட்டாயமில்லை என்பதும், பே டிஎம் போன்ற இ-வாலட் சேவைகளுக்கும் கூடாது என்பதும் அதன் பயன்பாட்டைக் குறைத்தது. 

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஆதார் எண்ணுக்காகப் பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கை 8,66,000 ஆக குறைந்துள்ளதாக இதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய தனி அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) ஆன்லைன் தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இதுவே, கடந்த அக்டோபர் மாதத்தில் 22.1 லட்சமாகவும், செப்டம்பர் மாதத்தில் 25.2 லட்சமாகவும், ஜனவரி மாதத்தில் 73.7 லட்சமாகவும் இருந்தது. 

அதேபோன்று, ஆதாரை அடிப்படையாகக்கொண்ட கேஒய்சி ( KYC- Know your customer) எனப்படும் வாடிக்கையாளரின் விரல் ரேகை, கருவிழிப் பதிவுமூலம் அடையாளம் காணப்படும் எண்ணிக்கை, கடந்த மார்ச் மாதத்தில் மிக உச்சமாக 37 கோடியாக இருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இது 15.4 கோடியாகக் குறைந்துள்ளது. 

யுஐடிஏஐ ஆவணப்பதிவு தகவல்களின்படி, 122 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும், 1.3 கோடி பேர் இன்னும் அந்த   எண் இல்லாமல் இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், இதில் 5 வயதுக்குக் குறைவான குழந்தைகள் சுமார் 60 லட்சம் பேர் என்றும் தெரியவந்துள்ளது. 

மக்கள், தங்கள் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடனும், வங்கிக் கணக்குடனும் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் முன்னர் வெளியானபோதுதான், அதன்  பயன்பாடு அதிக அளவில் காணப்பட்டதாக யுஐடிஏஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனியார் ஏஜென்சிகள், வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணைக் கேட்பது அல்லது பயன்படுத்துவதும் குறைந்துள்ளது. 

அதே சமயம், ஆதாரைப் பயன்படுத்தி அரசின் மானியத் திட்டங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நீடிக்கும் என்பதால், மாதம் ஒன்றுக்கு சுமார் 80 கோடி பேர் ஆதாரைப் பயன்படுத்தும் அளவுக்கு அதன் பயன்பாடு, ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும் என்றும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

இருப்பினும்,  புதிய பதிவுக்காக வருபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதற்கு, நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏற்கெனவே ஆதார் வைத்திருப்பதுதான் முக்கியக் காரணம் என்றும் யுஐடிஏஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஆதார் பதிவு 

இதனிடையே, தமிழகம் முழுவதும் 253 இடங்களில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  

தமிழகத்தில், 1,400 வங்கிக் கிளைகள், 1,500 அஞ்சலகக் கிளைகளில் ஆதார் பதிவு செய்யும் வசதியை யுஐடிஏஐ நிறுவனம் ஏற்படுத்தி இருந்தது. இந்த வசதியை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக யுஐடிஏஐ நிறுவனம், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 3,000 பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஆதார் பதிவு வசதிகளை ஏற்படுத்த யுஐடிஏஐ நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இந்த வசதி 90 நாள்களுக்குள் ஏற்படுத்தப்பட உள்ளதாக யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க