வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:14:00 (03/12/2018)

750 கிலோ வெங்காயம் 1,064 ரூபாய்! - பிரதமருக்கு அனுப்பிவைத்து கண்கலங்கிய விவசாயி

தன் நான்கு மாத உழைப்புக்குக் கிடைத்த மொத்தப் பணத்தையும் பிரதமருக்கு அனுப்பிய விவசாயி. 

வெங்காயம்

இந்தியாவில், 50% வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்துதான் உற்பத்திசெய்யப்படுகிறது. அங்குள்ள சஞ்சய் சாத்தே என்ற விவசாயி, தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தையும் கடந்த வாரம் மொத்த விற்பனைக்காக சந்தைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு, வெங்காயம் கிலோ 1 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதியாக, தன் வெங்காயத்தை கிலோ 1.40 ரூபாய் என நிர்ணயம் செய்து, மொத்தமாக 1,064 ரூபாய்க்கு விற்றுள்ளார். 

சுமார் நான்கு மாதமாகக் கஷ்டப்பட்டு உழைத்து, இறுதியில் வெறும் 1,064 ரூபாய்க்கு மொத்த வெங்காயமும் விலைபோனதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார் விவசாயி. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், அதை மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் உணர்த்தும் வகையில், தான் உழைத்துச் சம்பாதித்த பணத்தை அப்படியே மோடிக்கு மணி ஆர்டர் செய்துள்ளார். 

இது தொடர்பாக பி.டி.ஐ ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள விவசாயி, ``நான்கு மாத உழைப்புக்கு இப்படியொரு அற்பமான பணம் வந்தது மிகவும் வேதனையாக உள்ளது. என் உழைப்புக்குக் கிடைத்த பணத்தை பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளித்துவிட்டேன். அதை அனுப்ப மேலும் 54 ரூபாயும் செலவு செய்துள்ளேன். நான் எந்த அரசியல் கட்சியையும் குறை கூற விரும்பவில்லை. ஆனால், எங்கள்மீது சற்றும் பரிவு காட்டாத அரசின்மீது உள்ள கோபத்தின் காரணமாக இவ்வாறு செய்தேன்” என்று பேசியுள்ளார். 

கடந்த 2010-ம் ஆண்டு, ஒபாமாவுடன் உரையாடுவதற்கு மத்திய விவசாயத் துறை அமைச்சகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளில் சஞ்சய் சாத்தேவும் ஒருவர்.