`சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.. மெரினாவில் போராடக்கூடாது’ - உச்சநீதிமன்றம் தடை! | No Protests At Chennai's Marina Beach, Says The Supreme Court

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:06:00 (04/12/2018)

`சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.. மெரினாவில் போராடக்கூடாது’ - உச்சநீதிமன்றம் தடை!

மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

உச்சநீதிமன்றம்


2017ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், சென்னை மெரினா கடற்கரை முக்கியப் பங்கு வகித்தது. அங்கே திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், போராட்டத்தை அமைதியான வழியில் முன்னெடுத்துச் சென்றனர். மெரினாவைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரபரவென பரவிய போராட்டம், பெருவெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி, மெரினாவில் அனுமதியின்றி மக்கள் கூடுவதற்கும், போராட்டம் நடத்துவதற்கும், தமிழக அரசு தடை விதித்தது. இந்த நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, ”மெரினாவில் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தார்.  இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதிகள், தனி நீதிபதி அளித்த அனுமதியை ரத்து செய்தனர். உடனே, அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ”மெரினா கடற்கரை ஒரு சுற்றுலாப் பகுதி. அங்கே போராட்டங்களுக்கு அனுமதி அளித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, மெரினா கடற்கரையில் போராட்டங்களை நடத்த எவரையும் அனுமதிக்க முடியாது. அதே போல, போராட்டங்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் முடிவிலும் தலையிட முடியாது” என்று உத்தரவிட்டது.