வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:10:00 (04/12/2018)

`அக்‌ஷய் குமார் படம் பார்த்தேன்... அப்பவே முடிவுபண்ணிட்டேன்” - நெகிழவைத்த 13 வயது சிறுமி

அக்‌ஷய் குமாரின் படத்தால் கவரப்பட்ட 13 வயது சிறுமி, தன் வயதில் உள்ள மற்ற மாணவிகளுக்கு உதவிசெய்து நெகிழச்செய்துள்ளார்.

சிறுமி

PhotoCredits : Facebook/@Niranjan Davkhare

அனைத்து பெண்களுக்கும் நாப்கின் கிடைக்க வேண்டும். அந்நாள்களில், மற்ற நாள்களைப்போல அவர்கள் சகஜமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்' என்ற நோக்கில், மலிவு விலை நாப்கின்களையும் அதைத் தயாரிக்க உதவும் இயந்திரத்தையும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் கண்டுபிடித்து 'பத்மஶ்ரீ' விருது வாங்கியவர், கோவையைச்  சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். அவரை  இன்ஸ்பிரேஷனாகக்கொண்டு உருவான  படம்தான், 'பேட்மேன்' . இதில் ஹீரோவாக அக்‌ஷய் குமார் நடித்திருந்தார்.  இந்தப் படம்  இந்தியில் பெரும் ஹிட் அடித்தது.

இந்ப்த படத்தால் கவரப்பட்ட ரிவா துல்புலே என்ற 13 வயது சிறுமி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின் வழங்கி உதவிசெய்துள்ளார். மகாராஷ்டிராவை பூர்வீகமாகக்கொண்ட இந்தச் சிறுமியின் குடும்பம் தற்போது துபாயில் வசித்துவருகிறது. அக்‌ஷய் குமார் நடித்த  ‘பேட்மேன்’ படத்தால் கவரப்பட்டதால், இந்தச் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக துபாயில் நிதி திரட்டியுள்ளனர். இதையடுத்து, கடந்த வாரம் இவர் இந்தியாவுக்கு வந்தபோது மகாராஷ்டிரா மாநிலத்தில் சில பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவிகளுக்கு, ஒரு வருடத்துக்குத் தேவையான சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

இதுபற்றி ரிவா கூறும்போது, “ சில மாதங்களுக்கு முன்பு நான்  ‘பேட்மேன்’ படம் பார்த்தேன். அதன் பின்புதான் இங்குள்ள சிறுமிகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என எனக்குப் புரிந்தது. பிறகு, இந்தியாவுக்குச் சென்று சில சிறுமிகளுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தேன்.  முக்கியமாக, மகாராஷ்டிராவில் உள்ளவர்களுக்கு” என்றார். ரிவா, இது தொடர்பாக மகாராஷ்டிராவில் உள்ள சில அரசியல் தலைவர்கள், அரசு சாரா அமைப்பினரிடம் பேசி, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்து, அங்கு சிறுமிகளுக்கு நாப்கின்கள் வழங்கினார்.