பசு பாதுகாப்புப் போராட்டத்தில் ஆய்வாளர் கொலை - ரூ. 50 லட்சம் உதவித்தொகை அறிவித்த யோகி ஆதித்யநாத் | Police Inspector Subodh Kumar Singh Killed In UP

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:11:00 (04/12/2018)

பசு பாதுகாப்புப் போராட்டத்தில் ஆய்வாளர் கொலை - ரூ. 50 லட்சம் உதவித்தொகை அறிவித்த யோகி ஆதித்யநாத்

பசு பாதுகாப்பு தொடர்பாக நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில், காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.  

இரு தினங்களுக்கு முன், உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஹர் மாவட்டத்தின் மஹாவ் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் கன்றுகள், பசுக்களின் உடல் பாகங்கள் கிடந்துள்ளன. இது, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பசு பாதுகாப்பு அமைப்பினரைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என நேற்று அந்த மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில், பொதுமக்கள் மற்றும் சில இந்து அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தைத் தடுத்து, மக்களை சமாதானப்படுத்த அப்பகுதி காவலர்கள் முயன்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் திடீரென காவலர்கள் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அங்குள்ள காவல் நிலையம் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைத்தனர். போராட்டம் கட்டுப்படுத்தமுடியாத நிலையை அடைந்த பிறகு, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்தும் போராட்டக்காரர்கள் ஓயாமல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த கல்வீச்சுத் தாக்குதலில் சுபோத் குமார் சிங் என்ற காவல்துறை ஆய்வாளர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதே தாக்குதலில் மற்றொரு இளைஞரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், காவல் ஆய்வாளர் தாக்கப்பட்டு விழுந்துகிடக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வயல் வெளியில் நிறுத்தப்பட்டுள்ள காவல் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டு, தலைகீழாக விழுந்துகிடக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. 

இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த இன்ஸ்பெக்டரின் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் உதவித்தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


[X] Close

[X] Close