வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:12:00 (04/12/2018)

`பில் தயாரிப்போம்; கேரளா மீட்புப்பணிக்கு பணம் கேட்க‌ல!' - கடற்படைத் தளபதி விளக்கம்

'கேரளா வெள்ளத்தின்போது மேற்கொண்ட மீட்புப்பணிகளுக்காக எந்த பில்லும் அனுப்பவில்லை' என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 

கேரளா வெள்ளம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ''கேரளா வெள்ளத்தில் ரூ.31 ஆயிரம் கோடி மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ரூ.2,683 கோடிதான் கிடைத்துள்ளது. மத்திய அரசு வழங்கிய ரூ.600 கோடியில், நிவாரணப் பொருள்கள் வழங்கியதற்காகவும் மீட்புப்பணி மேற்கொண்டதற்காகவும்  ரூ.290 கோடி கேட்டுள்ளது. டெல்லியில், விமானப்படையும் தன் பங்குக்கு ரூ.33 கோடிக்கு பில் அனுப்பி எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது'' என்று குற்றம் சாட்டியிருந்தார். 

கேரளா வெள்ளம்

இந்திய கடற்படையைச் சேர்ந்த விமானங்களும், ஹெலிகாப்டர்களும் கேரள மீட்புப்பணியில் முக்கியப் பங்காற்றின. 17,000 பேரை மீட்டதோடு 1,173 பேரை ஏர்லிப்ட் செய்தும் கடற்படை ஹெலிகாப்டர்கள்  காப்பாற்றின.  விமானப்படை  பில் அனுப்பியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தென் பிராந்திய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் சாவ்லா நேற்று கொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ''கடற்படையைப் பொறுத்த வரை மீட்புப்பணிகள் மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படுகிறது. அதற்கான செலவுகளை முற்றிலும் கடற்படையே ஏற்றுக்கொள்ளும்.

கேரளாவில் வெள்ளம்

கடற்படை பயிற்சி என்பதே இதுபோன்ற மீட்புப்பணிகளை மேற்கொள்வதையும் உள்ளடக்கியதுதான். வீட்டின் மொட்டைமாடியில் ஹெலிகாப்டரை இறக்கி, மக்களை  விமானி மீட்டார். சவால் நிறைந்த நேரத்தில் எப்படி சமயோஜிதமாகச் செயல்பட வேண்டுமென்பது போன்றவற்றை இப்படிதான் கற்றுக்கொள்ள முடியும். மக்களை மீட்கும் பணிக்காக செலவுகளைக் கணக்கிட்டுக்கொண்டிருக்க முடியாது. விமானப் பராமரிப்பு, எரிபொருள் செலவு  ஆகியவற்றை கடற்படையே ஏற்றுக்கொள்ளும். ஆடிட்டிங் நோக்கத்துக்காக சில பில்களைத் தயாரிப்போம். அது, பணம் கேட்பதற்காக அல்ல '' என்று தெரிவித்துள்ளார்.. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க