வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (04/12/2018)

கடைசி தொடர்பு:22:17 (04/12/2018)

இறைச்சிக்காகக் கடத்தப்படும் நாய்கள்! - திரிபுராவில் தொடரும் அதிர்ச்சி சம்பவம்

சீனாவில், ஆண்டுதோறும் நாய்க்கறி திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தத் திருவிழாவின்போது, ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமாக நடைபெறுகிறது.  இதே கலாசாரம் தற்போது வட இந்தியாவிலும் அதிகம் பரவிவருகிறது. அசாம், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம்  நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் உள்ள விலங்குகள் அமைப்புகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இருந்தும் கள்ளச் சந்தையில் நாய்க்கறி விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

நாய்கள்

PhotoCredits : china Associated Press

திரிபுராவில் உள்ள 'பாவ்சம்' (Pawsome) என்ற நாய்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சில தன்னார்வலர்கள், இறைச்சிக்காகக் கடத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களைக் காப்பாற்றியுள்ளனர். பாவ்சம் அமைப்பின் செயலாளரும், நாய்களைக் காப்பாற்றியவருமான ரிக்வேத் டுத்தா (Rigved Dutta) தெரிவிக்கையில், “ஞாயிற்றுக்கிழமைதோறும் தெரு நாய்களுக்கு உணவளித்துவருவதை நானும் என் நண்பர்களும் பழக்கமாக வைத்துள்ளோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு, தெரு நாய்களின் எண்ணிக்கை குறைந்ததை நாங்கள் கவனித்தோம். நாய்களுக்கு உணவளிப்பதோடு மட்டும் எங்கள் பணி நிற்கக் கூடாது என முடிவுசெய்து, நாய்கள் காணாமல்போவதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தோம். அப்போது, நாய்கள் கறிக்காக கடத்திக் கொலைசெய்யப்படுவது தெரியவந்தது. 

இறைச்சிக்காக நாய்கள் கொலைசெய்யப்படுவதைக் கேட்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. நாய்கள் இறைச்சிக்காக விற்கப்படுவது நிறுத்தப்படவில்லையெனில், திரிபுராவில் ஆட்டிறைச்சி என்ற பெயரில் நாய்கறி விற்கப்படும் நிலை உருவாகும். நாய்கள் கொலைசெய்யப்படுவது கிரிமினல் குற்றம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி சுமன் மஜும்டெர் (Suman Majumder),  “ பாவ்சம் அமைப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் 2016-ம் ஆண்டு முதல் நாய்கள் கடத்தப்படுவதைக் கண்டறிந்து எங்களிடம் புகார் தெரிவித்தனர். முன்னதாக இதுபோன்ற பல கடத்தல்களை இவர்கள் கண்டறிந்துள்ளனர். அகர்டாலா நகரில்,  நாய்கள் கடத்தப்படுவதாக இவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நாங்கள் நடத்திய சோதனையில் 20-க்கும் மேற்பட்ட நாய்களின் வாயை இறுக்கிக்கட்டியபடி சாக்கு மூட்டைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நாய்களைக் கடத்திய சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார். 

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், மீட்கப்பட்ட நாய்கள் பாதுகாப்பான காப்பகங்களுக்குக் கொண்டுசென்று, அவற்றுக்கு உணவு, இருப்பிடம் போன்ற வசதிகளைச் செய்துகொடுத்துப் பாதுகாத்துவருகின்றனர். இவர்களின் செயலால், திரிபுராவில் நாய்க்கறி விற்பனை மற்றும் நாய்கள் கடத்தல் போன்றவை பெருமளவில் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாவ்சம் அமைப்பின் செயலாளர் ரிக்வேத் டுத்தா, விலங்குகள் பாதுகாப்பில்  இந்த ஆண்டுக்கான  ‘பத்ரா’ விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Photos & News Credits : indianexpress