செலவழித்தது ரூ.2 லட்சம்... விலைபோனது கிலோ 20 பைசாவுக்கு... விரக்தியில் கத்திரிக்காய் விவசாயி | Farmer destroys brinjal plantation in despair after receiving 20 paisa per kg for produce

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (04/12/2018)

கடைசி தொடர்பு:14:30 (04/12/2018)

செலவழித்தது ரூ.2 லட்சம்... விலைபோனது கிலோ 20 பைசாவுக்கு... விரக்தியில் கத்திரிக்காய் விவசாயி

காராஷ்டிரா மாநிலத்தில், விவசாயி ஒருவர் தான் பயிரிட்டு விளைவித்த கத்திரிக்காய்கள், கிலோ 20 பைசாவுக்கு விலை போனதால் ஏற்பட்ட விரக்தி மற்றும் கோபத்தால், தனது வயலில் பயிரிட்டிருந்த அனைத்து கத்திரிச்செடிகளையும் பிடுங்கி அழித்துள்ளார்.  

விவசாயியை விரக்தியில் தள்ளிய கத்திரி

விவசாய விளைபொருள்களுக்கு  லாபகரமான விலை வழங்க வேண்டும், பயிர்க் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர். இதன் ஒருகட்டமாக, சமீபத்தில் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தினர்.  விவசாய விளைபொருள்கள் எந்த அளவுக்கு விலைபோகிறது என்பதற்கு, மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். நாசிக் மாவட்டம், நாட்டின் வெங்காயத் தேவையை 50 சதவிகிதம் நிறைவுசெய்கிறது. ஆனால்,அங்கு வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பதில்லை.

கத்திரிக்காய்

இந்நிலையில், நிபாட் பகுதியைச் சேர்ந்த விவசாயி சஞ்சய் சாதே என்பவர், தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக, நாசிக் மொத்த விற்பனை சந்தைக்குக் கொண்டுசென்றிருக்கிறார். ஆனால், அங்கு ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு மட்டுமே விலைபோனது. வெங்காயத்தைப் பயிரிட்டு வளர்த்ததற்குத் தான் பட்ட கஷ்டங்களையெல்லாம் எடுத்துக் கூறியும், இறுதியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.1.40 க்கு மட்டுமே விலைபோனது. அவர் கொண்டுவந்த 750 கிலோ வெங்காயத்தையும் இப்படி விற்பனை செய்ததன் மூலம், மொத்தம் 1,064 ரூபாய் கிடைத்திருக்கிறது.

கத்திரிக்காய்

இதனால் கடுமையான மன உளைச்சல் அடைந்த சஞ்சய் சாதே, விவசாயிகளின் நிலைமையை அரசுக்கு உணர்த்தும் விதமாக, வெங்காயம் விற்றுக் கிடைத்த ரூ.1,064 பணத்தை பிரதமர் மோடியின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மணிஆர்டர் அனுப்பக் கூடுதலாக ரூ.54 செலவானது. நாட்டிலேயே விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக மகாராஷ்டிரம் மாறியுள்ளது. இதைப் போக்க இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இதுகுறித்த செய்தி நேற்று வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், அதே மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் வேதனையை உலகுக்குப் பறைசாற்றும் மற்றொரு சம்பவம் நடந்தேறியுள்ளது. அகமத்நகர் மாவட்டம், சாகுரி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர பவாகே என்ற விவசாயி ஒருவர், தன் நிலத்தில் கத்திரிக்காய் பயிரிட்டிருந்தார். கத்திரிக்காய் மூட்டை மூட்டையாக விளைந்த நிலையில், அதை எடுத்துக்கொண்டு நாசிக் மொத்த விற்பனை சந்தைக்கும், குஜராத் மாநிலத்தின் சூரத் சந்தைக்கும் கொண்டுசென்றார். ஆனால், அந்த இரு இடங்களிலுமே அவர் கொண்டுவந்த கத்திரிக்காய் கிலோ 20 பைசாவுக்கு மட்டுமே விலைபோனது. 

கத்திரிச் செடி

இந்த கத்திரிக்காயை விளைவிக்க அவர் 2 லட்சம் ரூபாய் செலவழித்திருந்த நிலையில், சந்தையில் கத்திரிக்காயை விற்றதன் மூலம் அவருக்குக் கிடைத்த தொகை வெறும் 65,000 ரூபாய் மட்டுமே. இதனால், மிகவும் மன விரக்தியும் கோபமும் அடைந்த விவசாயி பவாகே, தனது நிலத்தில் பயிரிட்டிருந்த அனைத்து கத்திரிச் செடிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்துள்ளார். 

இதுகுறித்து அவர், "எனது 2 ஏக்கர் நிலத்தில் கத்திரி பயிரிட்டிருந்தேன். சொட்டு நீர்ப்பாசனத்துக்கான குழாய்களையும் அமைத்து, உரம் போட்டு, பூச்சிக்கொல்லி மருந்து அடித்து மற்றும் விளைச்சலை அதிகரிக்க நவீன யுக்திகள் எதுவெல்லாம் உண்டோ அவை அனைத்தையும் கடைபிடித்து கத்திரிக்காயை விளைவித்தேன். கூடவே, வயலில் நான் மட்டுமல்லாது எனது குடும்பத்தினரும் உழைத்தோம். ஆனால், 2 லட்சம் ரூபாய் செலவுசெய்து விளைவித்த கத்திரிக்காய்மூலம் எனக்குக் கிடைத்தது வெறும் 65,000 ரூபாய் மட்டுமே.

கத்திரிக்காய்

இது எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்ததாலும், எனக்கு மேலும் இழப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, வயலில் பயிரிட்டிருந்த ஒட்டு மொத்த கத்திரிச்செடிகளையும் பிடுங்கி எறிந்துவிட்டேன். கடந்த மூன்று நான்கு மாதங்களாகவே எனக்கு இந்த வயலிலிருந்து போதுமான வருமானம் கிடைக்கவில்லை. வீட்டில் 3 பசுக்களை வளர்க்கிறேன். தற்போது கத்திரி பயிரும் இல்லாமல் போனதால், அவற்றின் தீனி செலவுக்கு என்ன செய்யப்போகிறேன் என்றே தெரியவில்லை" என்று வேதனையுடன் கூறியுள்ளார். 

விவசாயிகளின் வேதனைக் குரல் அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்ட,  அவர்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும் என ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க