உ.பி.யில் பசுக்காவலர்கள் அட்டூழியம்! - கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி உடலில் குண்டுகள் | bullets found police officer body in UP

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (04/12/2018)

கடைசி தொடர்பு:19:20 (04/12/2018)

உ.பி.யில் பசுக்காவலர்கள் அட்டூழியம்! - கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி உடலில் குண்டுகள்

டந்த 2015-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முகமது இக்லாக் என்ற முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார். மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் இது. தற்போது முகமது இக்லாக் கொலை விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சுபோத்குமார் சிங் பசுக் காவலர்களால் கொல்லப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

போலீஸ் அதிகாரி கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தாசார் பகுதியில் வயல்வெளியில் பசுவின் உடல்பகுதிகள் கிடந்ததாக ஒரு கும்பல் சாலை மறியலில் ஈடுபட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரை சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் தாக்கினர். போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், இளைஞர் ஒருவர் பலியானார். வன்முறையாளர்கள் தாக்கியதில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். 

கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி

இறந்து போன சுபோத்குமார் சிங் தாத்ரி மாட்டிறைச்சி விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றியவர். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தவர். தாத்ரி விவகாரத்தில் தொடர்புடைய 18 பேருமே தற்போது ஜாமீனில்தான் உள்ளனர். எனவே, சுபோத்குமார்சிங் குறி வைத்துத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. சுபோத்குமார்சிங்கின் மகன் அபிஷேக் தற்போது இன்ஜினீயரிங் படித்து வருகிறார். ``என் தந்தை மதத்தை முன்வைத்து நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிரான மனநிலை கொண்டிருந்தார். நாட்டுக்கு நல்ல குடிமகனாக மட்டுமே வாழ வேண்டுமென்று அடிக்கடி கூறுவார். இன்று நான் என் தந்தையை இழந்துள்ளேன். நாளை யாருடைய தந்தை இறக்கப் போகிறாரோ. வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் '' என்று வேதனை தெரிவித்துள்ளார். 

பசுக்காவலர்கள் செய்த கலவரம்

வன்முறைக் கும்பல் கல் வீசியதில் சுபோத்குமார் சிங் காயமடைந்துள்ளார். ஜீப் டிரைவர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் போலீஸ் வாகனத்தைக் கும்பல் முற்றுகையிட்டுவிட்டது. இதனால், டிரைவர் உயிருக்குப் பயந்து இறங்கி ஓடிவிட்டார். கும்பலிடம் சுபோத்குமார் சிங் தனியாக மாட்டிக் கொண்டுள்ளார். உடற்கூறு ஆய்வறிக்கையில் சுபோத்குமார் சிங் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை எடுத்தே அவரை சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சுபோத்குமார்சிங் குடும்பத்துக்கு ரூ.40 லட்சமும் மனைவிக்கு ரூ.10 லட்சமும் நிவாரணமாக அறிவித்தார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஆனால், சுபோத்குமார்சிங்கின் சகோதரி அரசு அறிவித்த பணம் எங்களுக்குத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க