வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (04/12/2018)

கடைசி தொடர்பு:21:40 (04/12/2018)

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு 25 கோடி அபராதம்! - பசுமைத் தீர்ப்பாயம்

டெல்லி

Jean-Etienne Minh-Duy Poirrier / flickr

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியதால் டெல்லி அரசுக்கு 25 கோடி அபராதம் விதித்துள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வழிமுறைகளைத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தபோதிலும் அதை டெல்லி அரசு செயல்படுத்தவில்லை.   

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது ஆண்டுதோறும் நிகழும் ஒரு விஷயம். மாசுபாட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்று மாசைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் காற்று மாசுபாட்டின் அளவு குறையவில்லை. அதிகளவிலான புகையை வெளியேற்றும் மோட்டார் வாகனங்களுக்கு உரிமம் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை எனப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் பயனில்லை. 

முண்ட்கா (Mundka) மற்றும் நீல்வால் (Neelwal) கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தாக்கல் செய்த மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் கோயல் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. முண்ட்கா மற்றும் நீல்வால் கிராமங்களில் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாகச் செயல்படும் தொழிற்சாலைகள், தோல், பிளாஸ்டிக், எண்ணெய், ரப்பர் ஆகியவற்றை எரிப்பதால் கடுமையான மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தனர். நான்கரை ஆண்டுகளாக இந்த மனு விசாரிக்கப்படவில்லை. இதைச் சரிவர கவனிக்காததால் டெல்லி அரசைக் கண்டித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 

மேலும் இதுபோன்று திறந்தவெளியில் எரிக்கப்படும் நிகழ்வுகளை நிறுத்துவதற்காக டெல்லியின் தலைமைச் செயலாளர் நகராட்சி அமைப்பு நிர்வாகிகளும் காவல்துறையினரும் இணைந்து அதைக் கண்காணித்து நிறுத்த வேண்டும் என வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. இவை எதையும் பின்பற்றாததே அபராதத்துக்கு முதற்காரணம். மேலும் அந்த 25 கோடி ரூபாயை வைப்புத்தொகையாக மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் பெயரில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.