வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (05/12/2018)

கடைசி தொடர்பு:12:10 (05/12/2018)

''தண்ணீர் சத்தம் போதும், ரெக்கார்டிங் தொடங்கிவிடும்!'' - பெண்கள் விடுதி கேமரா அதிர்ச்சித் தகவல்

சென்னை பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள  ஒரு பெண்கள் விடுதியில், ரகசிய கேமராக்கள் பொருத்தி படம்பிடித்திருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியை நடத்திவந்த சம்பத்ராஜ் என்ற சஞ்சீவ் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருச்சியைச் சேர்ந்த சம்பத்ராஜ், சென்னைக்கு ரியஸ் எஸ்டேட் அதிபராகும் ஆசையில் வந்துள்ளார்.  ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டமடைந்ததாகச்  சொல்லப்படுகிறது.   2011-ம் ஆண்டு, இவர்மீது நில மோசடி வழக்கும் பதியப்பட்டுள்ளது. 

பெண்கள் விடுதி

அண்ணா நகரைச் சேர்ந்த ஒருவரிடம் குடும்பத்துடன் வசிக்கப்போவதாகக் கூறி, இந்த இரண்டு மாடி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர், அதை விடுதியாக மாற்றி பெண்களைத் தங்கவைத்துள்ளார். பெண்கள், வேலைக்காக அறையை விட்டு  வெளியேறியதும், மாற்று சாவி பயன்படுத்தி அறையைத் திறந்து, உள்ளே படுக்கை அறை, மின் விளக்கு, கழிவறை போன்றவற்றில் ஊசிமுனை அளவே உள்ள கேமராக்களைப் பொருத்திவைத்திருக்கிறார்.

பெண்கள் விடுதியில் பொருத்தப்பட்ட கேமரா

இந்த கேமராக்களின் விலை ரூ.2,500. கழிவறையில் தண்ணீர் திறந்துவிட்டால் அல்லது கதவு திறக்கும் சத்தம் கேட்டாலேயே கேமரா ரெக்கார்ட் செய்யும். அறையில் நடமாட்டம் தெரிந்தாலும் கேமரா காட்சிகளைப் பதிவுசெய்யும். தொடர்ந்து 4 மணி நேரம் ரெக்கார்டிங் செய்யும் திறன் படைத்தது. இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை யாருமில்லாத நேரத்தில் அறைக் கதவுகளைத் திறந்து சம்பத்ராஜ் எடுத்து, லேப்டாப் அல்லது செல்போன்களுக்கு மாற்றியுள்ளார். சம்பத்ராஜ், தன் ரிஸ்ட் வாட்ச்சில்கூட கேமரா பொருத்தி வைத்திருந்துள்ளார். இன்ஜீனியரிங் படித்துள்ள இவருக்கு டெக்னாலஜி விஷயத்தில் நல்ல அறிவு உள்ளது. 

பெண்கள் விடுதியில் கேமராக்கள்

போலீஸார் கூறுகையில், ''தங்கியிருக்கும் அறையில் எப்போதுமே கவனத்துடன் இருப்பது நல்லது. அறையில் எங்காவது ஊசிமுனை அளவே உள்ள கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று  ஆராய்வது நல்லது. ஷோபா, கண்ணாடிக்குப் பின்புறம், துவாரங்கள் இருந்தால் அவற்றை சோதித்துப்பாருங்கள். அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு, மொபைல் போனால் சந்தேகத்துக்கிடமான இடங்களைப் புகைப்படம் எடுங்கள். அதில் சிவப்பு நிறம் தென்பட்டால், கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது  என ஜாக்கிரதை அடைந்துவிட வேண்டும்.  அறைக்குள் வைத்திருக்கும் பூஞ்செடிகள், புகைப்படங்களுக்குப் பின்புறம்கூட கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம்'' என்கின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க