`நான் பணத்தைத் திரும்பக் கொடுக்கிறேன்; ஏன் மறுக்கிறீங்க!' விஜய் மல்லையா ஆதங்கம் | I have offered to repay 100 % of the Principal amount to them says Vijay Mallya

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (05/12/2018)

கடைசி தொடர்பு:14:45 (05/12/2018)

`நான் பணத்தைத் திரும்பக் கொடுக்கிறேன்; ஏன் மறுக்கிறீங்க!' விஜய் மல்லையா ஆதங்கம்

நான் பணத்தைச் செலுத்துவதாகக் கூறிய பின்பும், அதை மறுப்பது ஏன்? என வங்கிகளுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் விஜய் மல்லையா.

விஜய் மல்லையா

13 பொதுத்துறை வங்கிகளிலிருந்து 9,000 கோடி ரூபாய்க் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகினார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்த இது தொடர்பாக வழக்குப் பதிந்து சி.பி.ஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர போலீஸ் முனைப்புக் காட்டி லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் முறையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது.

இது ஒருபுறம் இருக்க, அமலாக்கத்துறையினர் மல்லையாவின் சொத்துகளை முடக்கியுள்ளது. கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அவரின் பல்வேறு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கைது, வழக்கு, சொத்துகள் முடக்கம் என இப்படி நாலாப்புறமும் நெருக்கடியில் சிக்கித்தவித்து வந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் டென்னிஸ், குதிரைப் பந்தயம், பார்முலா ரேஸ், கிரிக்கெட் போட்டிகளை பார்க்கச் செல்வது என எப்போதுமே பிஸியாகவே இருந்து வருகிறார். 

இதற்கிடையே, மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளது. கண்டிப்பாக அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்; அதற்காக அவரை அடைக்கவுள்ள சிறை குறித்த விவரங்களை லண்டன் நீதிமன்றம் கேட்டுள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

ட்விட்

இந்நிலையில், நான் பணத்தைத் திருப்பிச் செலுத்த தயாராக இருக்கிறேன் என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``பொதுத்துறை வங்கிகளில் நான் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடிவிட்டதாக ஊடகங்களும், அரசியல்வாதிகளும் கூறி வருகின்றனர். இது அனைத்தும் பொய். நான் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடி விட்டதாகக் கூறும் இவர்கள் நான் பணத்தைத் திருப்பிச் செலுத்துகிறேன் எனக் கர்நாடக நீதி மன்றத்தில் கூறியதை ஏன் கூற மறுக்கிறார்கள். 

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான எரிபொருள் விலை அதிகரிப்பால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. நான் கடனாக வாங்கிய பணம் நஷ்டமானது. இருப்பினும் நான் வாங்கிய தொகை 100 சதவிகிதத்தையும் கொடுத்து விடுகிறேன் எனத் தொடர்ந்து கூறி வருகிறேன். தயது செய்து அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் கொடுக்கும் தொகையைப் பெற்றுக்கொண்டால் வங்கிகளுக்கு எந்த நஷ்டமும் இல்லை. 

விஜய் மல்லையா

2016 ம் ஆண்டு முதல் பணத்தைச் செலுத்துவதாகக் கூறி வருகிறேன். ஆனால் நான் சரணடையும் முடிவு குறித்து ஊடகங்களில் எழுப்பப்படும் கதைகளை கவனித்து வருகிறேன். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதை விட மிக முக்கியமான விஷயம் மக்களின் பணத்தை 100% செலுத்தத் தயாராக இருக்கிறேன். அரசும், வங்கிகளும் இந்தப் பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் பணத்தைச் செலுத்துவதாகக் கூறிய பின்பும், அதனை மறுப்பது ஏன்?" எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close