`ஆன்டி பயாடிக்' பிராய்லர் கோழிகள்! - தடைவிதிக்கத் தயாராகும் மத்திய அரசு? | government has proposed a ban on colistin used to fatten chicken

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (05/12/2018)

`ஆன்டி பயாடிக்' பிராய்லர் கோழிகள்! - தடைவிதிக்கத் தயாராகும் மத்திய அரசு?

பிராய்லர் கோழிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் உபயோகிக்கப்படும் ஆன்டி பயாடிக்கை தடை செய்ய மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோழி

உலகம் முழுவதும் குறுகிய காலத்தில் மிக வேகமாகக் கோழிகளை வளரச் செய்ய ஆன்டிபயாடிக் செலுத்தப்பட்டு கோழி வளர்க்கப்படுகிறது. இதை மனிதர்கள் உண்ணும் போது அவர்களின் உடலிலும் இது கலப்பதால் மனிதர்களுக்கும் உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் இதனால் நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்தைக் கொடுக்கும்போது அதை வேலை செய்யவிடாமல் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சமீபத்தில், லண்டனைச் சேர்ந்த பத்திரிகைப் புலனாய்வு நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் விற்கப்படும் கோழிகளில் அதிகளவில் கொலிஸ்டின் (colistin) என்ற ஆன்டிபயாட்டிக் செலுத்தப்படுவதாக அறிக்கை வெளியிட்டது. உலகளவில் கோழி இறைச்சிகளை மையமாக வைத்து தொழில் செய்யும் பிரபல நிறுவனங்களுக்கு, இந்தியாவில் உள்ள ஒரு பெரும் நிறுவனம் கோழி சப்ளை செய்கிறது. அந்த நிறுவனம் அதிகளவில் ஆன்டிபயாடிக் பயன்படுத்துவதாகவும் அதில் சில போதைப் பொருள்களும் கலக்கப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு வியட்நாம், இந்தியா, தென் கொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் விலங்குகளுக்குச் செலுத்தப்படும் கொலிஸ்டின் ஆன்டிபயாடிக் சுமார் ஆயிரம் டன் அளவு இறக்குமதி செய்துள்ளதாகவும் பத்திரிகை நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, விலங்குகள் நலப் பாதுகாப்பு அமைப்பு, பால் மற்றும் மீன் பிடித் துறை, உணவுப் பாதுகாப்பு துறை, விவசாயத் துறை, சுகாதார மற்றும் குடும்ப நலன் துறை ஆகியவை ஆன்டிபயாடிக் மூலம் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் ஆன்டிபயாடிக் உபயோகத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த போதைப் பொருள் தடுப்பு மருத்துவர்கள் கடந்த மாதம் 29-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதிலும் ஆன்டிபயாடிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். எனவே ஆன்டிபயாடிக் மூலம் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தடைவிதிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2006-ம் ஆண்டு ஐரோப்பா இந்த கொலிஸ்டின் ஆன்டிபயாடிக்கிற்கு தடைவிதித்துள்ளது  இந்த நாட்டைத் தொடர்ந்து சீனா, மலேசியா போன்ற நாடுகளும் தடைவிதித்துள்ளது என்பது கூடுதல் செய்தி.