வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (05/12/2018)

கடைசி தொடர்பு:15:49 (05/12/2018)

``கடனை 100% திருப்பித் தருகிறேன்... வாங்க மறுக்கக் கூடாது!" - விஜய் மல்லையாவின் அலறல் பின்னணி

வங்கிகளில் நான் வாங்கிய கடன் பொதுமக்களின் பணம். அதை 100 சதவிகிதம் திருப்பிச் செலுத்த நான் தயாராக இருக்கிறேன். வங்கிகளும் அரசாங்கமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

ந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடனைப் பெற்று விட்டு லண்டன் தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் பிரிட்டன் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது. இந்த நிலையில், வங்கிகளில் வாங்கிய கடனை 100 சதவிகிதம் திருப்பிச் செலுத்த தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

விஜய் மல்லையா

கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் மல்லையா, தனது தொழில் அபிவிருத்திக்காக வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கினார். அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு அவர் தப்பியோடினார். அவரை நாடு கடத்தக்கோரி, பிரிட்டன் நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என மல்லையா பிரிட்டன் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். 

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை பிரிட்டன் நீதிமன்றம் விரைவில் அளிக்க உள்ள நிலையில், இந்திய வங்கிகளில் தாம் வாங்கிய கடனின் அசல் தொகை  (principal loan) முழுவதையும் திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாகவும், தமது மதுபான தயாரிப்பு நிறுவனம் மூலம் அரசாங்க கஜானாவுக்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்துள்ளதாகவும் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ச்சியாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்களில், ``அரசியல்வாதிகளும் ஊடகங்களும், நான் பொதுத் துறை வங்கிகளில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் ஓடிப்போனவன் என்று தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்கள். இவை அனைத்துமே பொய். கடனை செட்டில் செய்வதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளேன். அப்படி இருந்தும் நான் ஏன் பாரபட்சமாக நடத்தப்படுகிறேன். 

வங்கிகளில் நான் வாங்கிய கடன் பொதுமக்களின் பணம். அதை 100 சதவிகிதம் திருப்பிச் செலுத்த நான் தயாராக இருக்கிறேன். வங்கிகளும் அரசாங்கமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி அதை வாங்கிக் கொள்ள மறுத்தால் அது ஏன் என்பதை விளக்க வேண்டும். 

வங்கிகளிடமிருந்து நான் வாங்கிய கடன் முழுவதையும் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் (தற்போது செயல்படவில்லை)  நிறுவனத்துக்குத்தான் பயன்படுத்தினேன். ஆனால், விமான எரிபொருளின் விலை கடுமையான உயர்வாக இருந்ததால், நஷ்டம் ஏற்பட்டு நிதிச் சிக்கல் ஏற்பட்டது.  நஷ்டம் அதிகரித்து, வங்கிகளிடம் வாங்கிய கடன் அதிலேயே கரைந்துபோனது. 

எனது யுனைடெட் ப்ரீவெரிஸ் மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், கடந்த 30 ஆண்டுக் காலத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அரசாங்க கஜானாவுக்கு வரியாகக் கொட்டிக் கொடுத்துள்ளேன். விமான நிறுவனத்தில்தான் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், கடனைத் திரும்பக் கொடுக்க நான் தயாராக உள்ளேன். எனவே வங்கிகளுக்கு எவ்வித இழப்பும் இல்லை" என மேலும் தெரிவித்துள்ளார். 

மல்லையாவின் அலறல் பின்னணி

மல்லையா இவ்வாறு வங்கிகளில் வாங்கிய கடனில் 100 சதவிகிதத்தையும் ( அசல் மட்டும்) திருப்பித் தர தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதன் பின்னணியில், நாடு கடத்தக்கோரும் வழக்கின் தீர்ப்பு விரைவில் இருப்பதும் முக்கியக் காரணமாக உள்ளது. பெரும்பாலும் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தற்காலிகமாக சிபிஐ-க்கு அதில் பின்னடைவு ஏற்பட்டாலும், எப்படியும் தாம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு விடுவோம் என்ற அச்சம் மல்லையாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேலை, இந்திய உளவுத் துறையான ரா, துபாயிலிருந்து இந்தியாவுக்கு அள்ளிக்கொண்டு வந்திருப்பதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம், 450 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் வழங்கியதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்த நிறுவனத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல்

இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதமே தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிமன்றம், ஜேம்ஸ் மைக்கேலை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது. ஆனால், இதுகுறித்த முறையான அறிவிப்பு தங்களுக்கு வரவில்லை என ஜேம்ஸின் வழக்கறிஞர் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து மீண்டும் விசாரித்த துபாய் நீதிமன்றம், அவரை நாடு கடத்துவதை மீண்டும் உறுதி செய்து உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து, துபாயிலிருந்து விமானம் மூலம் `ரா' அதிகாரிகள் அவரை டெல்லிக்கு அழைத்து வந்தனர். பின்னர் டெல்லி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் அவரை முறைப்படி கைது செய்து அழைத்துச் சென்றனர். 

இதுபோன்ற ஊழல் வழக்கு மற்றும் வங்கி மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும்  மெகுல் சோக்ஸி உள்ளிட்டவர்களையும் இந்தியாவுக்கு அள்ளிக்கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாலேயே, மல்லையா இந்த அளவுக்கு அலறியடித்து ட்வீட் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்